Ads (728x90)

மஹிந்த மற்றும் ரணில் ஆட்சியில் ஊழலுக்குப் பழக்கப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார்கள். இதில் எமது தலையீடு ஏதும் இல்லை. 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு அமையவே தற்போது கைதுகள் இடம்பெறுகின்றன என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதும் அரசியல் பழிவாங்கல் அல்ல. அது அரச நிர்வாக கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதற்காகவே மக்கள் எமக்கு ஆணை வழங்கினார்கள். அந்த ஆணையையே கடுமையாக செயற்படுத்துகிறோம். இதில் எவ்வித தவறும் கிடையாது.

எவரையும் பழிவாங்கவேண்டிய தேவை எமக்கு இல்லை. நாங்கள் அவ்வாறு நினைக்கவுமில்லை. அவ்வாறு நினைத்தால் விளைவுகள் பாரதூரமானதாக அமையும். மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் ஒருபோதும் ஆட்சிக்கு வரமாட்டார்கள். ஒன்று நாங்கள் மீண்டும் வருவோம். அல்லது எங்களை விட சிறந்த தரப்பினர் ஆட்சிக்கு வருவார்கள். 

 இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தை வலுப்படுத்துவதற்காகவும், நடைமுறையில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காகவே ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. அரச நிறுவனங்களின் வருவாய் கிடைப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வரி செலுத்தல் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சுயாதீனம் மற்றும் கடுமையான செயற்பாடுகளின் ஊடாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தில் எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது. ஊழல்வாதிகளை பாதுகாக்கவேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. 

உலகில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து தான் பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் முன்னேற்றமடைந்துள்ளன. அவ்வாறான நடவடிக்கைகளை இங்கு முன்னெடுக்கும்போது ஊழல்வாதிகளும், எதிர்க்கட்சிகளும் அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்..


Post a Comment

Recent News

Recent Posts Widget