Ads (728x90)

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும், பௌத்த பிக்குகளின் மத உரிமைகளைப் பாதுகாத்து காவி உடைக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளுக்கு எழுத்துமூலமாக உத்தரவாதமளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கூடாரமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தேரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதான வாயிலை அடைந்தபோது, முதலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயாக்க தம்மைச் சந்திப்பதற்கு வருகை தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.

குறித்த வலியுறுத்தலை அடுத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தேரர்களை நேரில் சந்திப்பதற்கான வருகை தந்திருந்தார். அச்சமயத்தில் சிறையில் உள்ள ஞானசாரதேருக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று தேரர்கள் வலியுறுத்தினார்கள். அத்துடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் வழங்கினார்கள்.

நீதித்துறையுடன் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் தனக்கு பதிலளிக்க முடியாது என்று சுட்டிக்காட்டி அவர் அவ்விடத்திலிருந்து மீண்டும் செயலகத்துக்கு திரும்பினார்.

அதனைத்தொடர்ந்து சுமார் அரைமணிநேரத்துக்கு பின்னர் ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர், ஒருமாத காலத்துக்குள் தேரர்களின் கோரிக்கை சம்பந்தமாக பதிலளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

எனினும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பதிலளித்த தேரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கூடாரம் அமைத்து அமர்ந்திருந்தவாறு தமது போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக வீதி முழுமையாகத் திறக்கப்பட்டுள்ள நிலையில், தேரர்கள் குழுவினர் பிரித் பாராயணம் ஓதி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான எதிர்கட்சி அரசியல் குழுக்கள் உள்ளிட்ட பலர் கலைந்து சென்றுள்ளனர்.

அப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களே பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி தலதா மாளிகையில் இருந்து வந்த குழுவினரே தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக அமர்ந்து தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த 10ஆம் திகதி கண்டியிலிருந்து ஆரம்பித்த நடைபவனி நேற்று 15ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. ஆறு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இந்தப் பாதயாத்திரையில் மகா சங்கத்தினருடன் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget