Ads (728x90)

திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி, ”ஜனவரம புரவசியோ” (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் பௌத்த பிக்குகள் தலைமையில் இரண்டாவது பாரிய அமைதிப் பேரணி நேற்று திங்கட்கிழமை அநுராதபுரத்தில் நடைபெற்றுள்ளது.

அநுராதபுரம் நகருக்குள் பேரணியாகச் சென்ற பௌத்த பிக்குகளும், பொதுமக்களும், ஜனாதிபதிக்கு மக்கள் வழங்கிய ஆணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டும் என்றும், வடக்கிலும் தெற்கிலும் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டதற்கு நாட்டில் சட்டம் சீர்குலைந்திருந்தமையும் ஒரு காரணம் என்றும் எனவே நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

எந்தவொரு நாட்டிலும் முதலிடம் வகிக்கவேண்டியது சட்டக் கட்டமைப்பாகும். சட்டம் சீர்குலைந்திருந்த நாட்டை தற்போது இளைஞர்கள் ஓரளவுக்குச் சீரமைத்து முன்னோக்கிக் கொண்டுசெல்லும் நிலையில், அதனை மீண்டும் சீர்குலைப்பதற்குப் பல்வேறு தரப்பினர் பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றனர். எனவே, இத்தகைய செயற்பாடுகளைக் கண்டு இளைஞர்கள் மனம் தளரவேண்டிய அவசியமில்லை.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது. அவற்றைப் படிப்படியாகத் தீர்த்துக்கொண்டு முன்னோக்கிச் செல்லவேண்டும். மதம் எதுவாக இருந்தாலும், நாட்டின் சட்டக் கட்டமைப்பைச் சீரமைத்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் நாம் வலியுறுத்துவது என்னவென்றால், நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும் என ரேணியில் பங்கேற்ற ஒரு பௌத்த தேரர் தெரிவித்துள்ளார். 


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget