Ads (728x90)

பல வருடங்களாக ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படாததால், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அதிபர்களால் 8,788 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வகுப்பறைகளில் சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு அமையப் போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை இன்றி எந்தவொரு உத்தியோகத்தரையுமே ஆசிரியர் சேவையில் நேரடியாக உள்வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்கள் 23,006 இற்காக, இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1-(அ) தரத்திற்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய பாடசாலைகளில் 4,484 வெற்றிடங்கள் நிலவுவதோடு, மேல் மாகாணத்தில் 2,500, மத்திய மாகாணத்தில் 3,480, தென் மாகாணத்தில் 1417, வட மாகாணத்தில் 1,685, கிழக்கு மாகாணத்தில் 2,267, வடமேல் மாகாணத்தில் 2,025, வடமத்திய மாகாணத்தில் 1,345, ஊவா மாகாணத்தில் 1,606 மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் 1,997 என வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு விண்ணப்பதாரிக்கு க.பொ.த உயர்தரப் பாடங்கள் இரண்டிற்கும், சாதாரண தரப் பாடங்கள் இரண்டிற்கும், தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள் ஆகிய பிரிவுகளின் கீழும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தமையாலும், நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையச் செயற்பட வேண்டியிருந்தமையாலும் இது சற்றே சிக்கலான ஒரு நடைமுறையாக மாறியுள்ளது.

அதற்கமைய, பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒரே விண்ணப்பதாரி பல பாடங்களின் கீழ் தகுதி பெற்றுள்ளமையால், இக்கட்டத்தில் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரிகள் உட்பட நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ள மொத்த விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை 17,688 ஆகும்.

மேலும், திறந்த அடிப்படையின் கீழ் 11,906 பாடச் சேர்க்கைகளும், வரம்புக்குட்பட்ட அடிப்படையின் கீழ் 23,665 பாடச் சேர்க்கைகளும் நேர்முகப்பரீட்சைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நிலவும் வெற்றிடங்களுக்கு இரு மடங்கு எண்ணிக்கையிலானோர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட வேண்டும் என்பதால், முதற்கட்ட ஆட்சேர்ப்புகளுக்குப் பின்னர் எஞ்சியுள்ள வெற்றிடங்களுக்குப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்களின் கீழ் அழைப்புகள் விடுக்கப்படும்.

இருப்பினும்,இந்த ஆட்சேர்ப்பு நடைமுறைகள் நிறைவடையும் வரை பாடசாலை அமைப்பில் தற்போது பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

முன்னுரிமை அளிக்கப்படும் பிள்ளைகளின் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துதல், தற்போது கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியாயத்தை வழங்குதல் மற்றும் புதிதாகப் பட்டம் பெற்று ஆசிரியர் தொழிலுக்கு வர எதிர்பார்க்கும் இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பளித்தல் ஆகிய 3 தரப்பினரையும் கவனத்திற் கொண்டு, இந்தச் சிக்கலான சூழ்நிலையை அரசாங்கம் நுட்பமாகவும், மேற்பார்வையுடனும் நிர்வகிக்கும் என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget