இப்பாகமுவையில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பாதாள உலகக் குழுக்களின் கைவசம் உள்ள அபாயகரமான ஆயுதப் பிரயோகம் குறித்துச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 93 T-56 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நிக்கவெரட்டிய காவல் நிலையத்தில் கூட இவ்வளவு T-56 துப்பாக்கிகள் இல்லை என்றும், அத்தனை ஆயுதங்கள் பாதாள உலகக் கும்பலிடம் இருந்துள்ளன என்றும், அதுமட்டுமன்றி தற்போது வரை 139 துப்பாக்கிகள் மற்றும் 104 ரிவோல்வர்கள் எம்மால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பாதாள உலகத்தின் பிடி எந்தளவுக்கு வேரூன்றியிருந்தது என்பதற்கு இதுவே சான்று என்றும் அவர் தெரிவித்தார்.கடந்த காலங்களில் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கலாச்சாரத்திற்கு அரச கட்டமைப்புக்குள்ளேயே பாதுகாப்பு இருந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, காவல்துறையிலும் சில அரசாங்க நிறுவனங்களிலும்கூட இத்தகைய குற்றவாளிகளுக்குச் சிறிய அளவிலான அரசியல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார்.
ஆனால், இப்போது தாங்கள் அந்தப் பாதுகாப்பை முழுமையாக இல்லாதொழித்து வருவதாகவும், பாதாள உலகத்திற்கு எதிரான இந்த மோதலுக்கு நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.அரசாங்கம் மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளால் அச்சமடைந்துள்ள பாதாள உலகக் குழுக்கள், அரசாங்கத்தை வீழ்த்தப் போதைப்பொருள் பணத்தைப் பயன்படுத்தி வருவதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.
தாங்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது, அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராகப் பணத்தை வாரி இறைக்கிறார்கள். குறிப்பாக சில ஆர்ப்பாட்டங்களுக்கும் பேரணிகளுக்கும், சில இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் போதைப்பொருள் பணத்தை இறைக்கிறார்கள்.
அரசாங்கத்தைத் தாக்குங்கள், அரசாங்கத்தை விரட்டுங்கள் என அவர்கள் எதற்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால், அது வேறொன்றுக்காகவும் அல்ல, தங்களின் பாதாள உலகத்தையும் போதைப்பொருள் பேரரசையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இதைச் செய்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.அனுராதபுரம் புனித நகரத்தின் எதிர்கால அபிவிருத்திக்காக இந்திய அரசிடமிருந்து கணிசமான அளவு நிதி உதவியைப் பெறவுள்ளோம். அண்மைக்கால விஜயத்தின் போது, நமக்கு 100 மில்லியன் டொலர் உதவி வழங்கப்பட்டது.
அவர்கள் பெருமளவிலான தற்காலிக பாலங்களை நமக்கு வழங்கியதுடன், கூடுதல் பாலங்களைக் கட்டுவதற்கும் கடன் உதவிகளை வழங்கியுள்ளனர்.இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமரின் விசேட பிரதிநிதியாக இலங்கை வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களுடன் நாங்கள் வலுவான உறவைப் பேணி வருகிறோம்.
நாங்கள் ஜப்பானுக்கும் விஜயம் செய்திருந்தோம். அங்கு நமது நாட்டின் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்காகப் பேருந்துகளைக் கோரினோம். அவர்கள் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தற்போது பேருந்துகளை வழங்கியுள்ளனர்.
நாங்கள் சீனாவுக்கும் விஜயம் செய்து 100 மின்சாரம் மூலம் இயங்ககூடிய பேருந்துகளைக் கேட்டிருந்தோம், அதற்குச் சீன அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.
நாங்கள் அனைத்து நாடுகளுடனும் மிகவும் சமநிலையான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றி வருகிறோம். யாருடனும் மோதலில் ஈடுபடும் எண்ணம் நமக்கு இல்லை. நமது நிலைப்பாடு என்னவென்பதை நாம் நன்கு அறிவோம்.மோதல்கள் ஏற்படும் பட்சத்தில், நாம் எந்தவொரு குறிப்பிட்ட பக்கமும் சார மாட்டோம். நமது வெளியுறவுக் கொள்கையில் நாம் தெளிவாக இருக்கிறோம் எனவும் நாட்டின் வெளியுறவுக் கொள்கைத்தொடர்பான பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்குப் போர் தொடங்குவதற்கு முன்னர் உலக சந்தையில் டீசல் பீப்பாய் ஒன்றின் விலை குறைவாக இருந்த நிலையில், போர் காரணமாக தற்போது டீசல் மற்றும் பெற்றோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஒவ்வொரு லீட்டர் டீசலுக்கும் 100 ரூபா வீதம் மானியத்தை வழங்கியதாகவும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் லீட்டருக்கு 70 ரூபா வீதம் மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமான நிறுவனமாக மாற்றியுள்ளோம்.
கடந்த காலங்களைப் போலன்றி மிகக் குறைந்தளவு ஊழியர்களுக்கே நியமனம் வழங்கினோம். பொறியியலாளர்கள் உள்ளிட்ட 10 பேர் மாத்திரம் புதிதாக இணைத்துக்கொண்டு நிறுவனம் திறம்பட நிர்வகிக்கப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறைந்த விலைக்கு எரிபொருளை விற்பனை செய்யும் நிலையில், தனியார் நிறுவனங்களால் அந்த விலைக்கு விற்க முடியாது எனத் தெரிவித்து விலையை உயர்த்தக் கோருகின்றன.ஒரு நிறுவனம் டீசல் லீட்டருக்கு 132 ரூபா அதிகரிப்பை கோருகிறது. மற்றொரு நிறுவனம் லீட்டருக்கு 116 ரூபா அதிகரிப்பை கோருகின்றது. நாங்கள் அவ்வாறு அதிகரிக்கவில்லை.
70 ரூபா நிவாரணத்துடன் லீட்டருக்கு 10 ரூபா அதிகரித்து மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விலை அதிகரிக்காவிட்டால் எரிபொருளை விற்பனை செய்ய போவதில்லை என எரிபொருள் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம் பழைய ஒப்பந்தங்கள் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குகின்றன. அந்த பழைய ஒப்பந்தம் மீண்டும் திருத்தம் செய்யப்படும் என்றார்.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள போர் மற்றும் பணவீக்கச் சூழல் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நூல்கள் மீதான வரிகளை நீக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.








Post a Comment