Ads (728x90)

தற்போது கொழும்பிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் அமைப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நிகவெரட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், 900 இற்கும் மேற்பட்ட அதிகாரிகளைப் புதிதாக இணைத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் இலங்கைக்குள் மோசடி மற்றும் ஊழல்கள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், அரச சேவையில் இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

ஒவ்வொரு மாகாணத்திலும் கையூட்டல் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

திருட்டு மற்றும் பொதுச் சொத்துகளை வீணடிக்கும் செயற்பாடுகள் தொடரும் வரை ஒரு நாடு வளர்ச்சியடைய முடியாது. திருட்டையும், வீண்செலவுகளையும் தடுத்து நிறுத்துவதே தமது அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் 2027 ஜனவரி மாதத்தில் மீண்டும் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

இதன்படி, ஆசிரியர்களின் ஆரம்பச் சம்பளம் 65,000 ரூபாவாகவும், மருத்துவர்களின் ஆரம்பச் சம்பளம் 94,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும், அரச சேவைகளை மக்களுக்கு வினைத்திறனுடன் வழங்குவதற்கும் வலுவான அரச சேவை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 121,000 புதிய அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி அறிவித்தார்.

இந்த ஆட்சேர்ப்புகள் அரசியல் நியமனங்கள் மூலம் மேற்கொள்ளப்படாமல், போட்டிப் பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் ஊடாக நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், கிராம உத்தியோகத்தர்கள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் பயிலுநர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு வலுவானதும் வினைத்திறனானதுமான அரச சேவை அவசியம் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.




 

Post a Comment

Recent News

Recent Posts Widget