Ads (728x90)

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசியல் இலாபத்துக்கான விமர்சனங்களுக்கு முன்னுரிமை வழங்க போவதில்லை என சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும்போது அனுபவம் இருக்கவில்லை என்று கூறியதை நாம் ஒப்புக்கொள்கிறோம். எமக்கு அனுபவம் இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நாம் யாரும் தனியாகச் செயல்பட்டவர்கள் அல்ல. நாம் எப்போதும் ஓர் அரசியல் இயக்கமாக வலுவான அமைப்பாக, கொள்கைப்பூர்வமாக நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்பட்டோம். 

கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது எந்தவொரு அமைச்சரும், எந்தவொரு அமைச்சும் தனித்துச் செயல்படவில்லை. கூட்டாக முடிவெடுத்து, ஒருவரையொருவர் குறைகளைத் திருத்திக் கொண்டு, கற்றுக்கொண்டு, கற்றுக்கொடுத்துக்கொண்டே முன்னோக்கிச் செல்கிறோம். நாட்டின் மக்களுக்குச் சேவை செய்வதற்காகத் தீவிர அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறோம்.

இரண்டு ஆண்டுகாலப் பயிற்சியின் மூலம் சட்டத்திற்குப் பணியும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் திசையை நோக்கி, ஒவ்வொரு அமைச்சும் ஒவ்வொரு நிறுவனமும் மக்கள் சேவைக்காகச் சீர்மிகுந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்பி வருகின்றன. 

முன்மாதிரியான தலைமையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து தொடங்கி அனைவருக்கும் வழங்கி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்துத் துறைகளிலும் நாடு முன்னோக்கி கொண்டுவரப்பட்டுள்ளது. நமது ஐந்தாண்டுகள் நிறைவடையும் போது உலகின் மிகச் சிறந்த முன்மாதிரி நாடாக மாற்றப்படும் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 16 லட்சம் பாடசாலை மாணவர்களுக்குக் கடந்த ஆண்டில் தலா 6,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலும் அது நடைமுறைப்படுத்தப்படும். 

சுமார் 14 லட்சம் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளமும் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீட்டுப் நுகர்வுச் செலவுகள் அதிகரிக்கும் போது, ஒழுங்கமைக்கப்படாத துறையிலுள்ளவர்களின் வருமானமும் அதிகரிக்கும்.

நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு 5,000 ரூபா மஹாபொல கொடுப்பனவு மட்டுமே கிடைத்தது. இப்போது அது 10,000 ரூபாவாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் 23,000 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதோடு, ஒட்டுமொத்த அரச சேவைக்கும் ஒரு இலட்சத்து பத்தாயிரம் பேரை இணைத்துக்கொள்கிறோம். முன்பள்ளி மாணவர்களின் காலை உணவிற்காக வழங்கப்பட்ட 60 ரூபா தொகையை 100 ரூபாவாக அதிகரித்துள்ளோம். முன்பள்ளி ஆசிரியைகளின் 'குரு அபிமானி' கொடுப்பனவை 6,000 ரூபாவாக அதிகரித்து எதிர்காலத்தில் மேலும் உயர்த்த முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.

நன்னடத்தை பராமரிப்பிலுள்ள பிள்ளைகள் 18 வயதைப் பூர்த்தி செய்து சமூகத்தில் இணையும் போது, ஒரு நிதி சேரும் வகையில் மாதந்தோறும் 5,000 ரூபா வீதம் வழங்கப்படுகிறது. அவர்களுக்காக 18 வயது பூர்த்தியடைந்த பின்னர் வழங்குவதற்காகத் தலா 20 இலட்சம் ரூபா வீதம் வீட்டு உதவித்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுவரை காலம் நாட்டின் பொருளாதாரப் பலன்களைக் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அனுபவித்து வந்ததை மாற்றி, பொது மக்களுக்குச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget