Ads (728x90)

“சிரிலிய சவிய” நிதியத்துடன் தொடர்புடைய வங்கிக் கணக்கிலுள்ள பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி, தலா ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷவின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரின் கடிதத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த மருத்துவ அறிக்கையில், ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, விசாரணைகளின் முன்னேற்றத்தை டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget