Ads (728x90)

மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் நிலப்பகுதியைச் சுமார் 200 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், குறித்த காணியை அவர்களின் கால்நடை மேய்ச்சல் நடவடிக்கைகளுக்காக உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னே ஞானானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் நிலப்பிரச்சினை தொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே தென்னே ஞானானந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் நிலப்பகுதி பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினையாகத் தொடர்ந்து வருகின்றது. குறிப்பாக, விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கையை முன்னெடுத்து வரும் மக்கள் இந்தப் பிரச்சினையால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கால்நடைகளுக்கு உணவளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் குறித்த மேய்ச்சல் நிலப்பகுதியை அப்பகுதி மக்கள் சுமார் 200 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். தலைமுறை தலைமுறையாகக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் மக்களின் வாழ்வாதாரத்துடன் இந்த நிலப்பகுதி நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இந்த மேய்ச்சல் நிலப்பிரச்சினை தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பொன்றும் வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணியை கால்நடைகளின் மேய்ச்சல் நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், அரசாங்கத்துக்குச் சொந்தமான குறித்த காணியை இதுவரை கால்நடை வளர்ப்பாளர்களுக்கும், கால்நடை வளர்ப்பைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கும் விடுவிப்பதற்கு தற்போதைய அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

மாறாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாகப் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி உள்ளிட்டோர் வெளியிடும் கருத்துகள் அப்பகுதி மக்களைப் பரிகாசத்துக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினையிலிருந்து விலகிச் செல்லும் போக்கையே காணமுடிகின்றது.

இதனால், தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்தை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகின்றனர். தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் முன்னெடுத்து வரும் இந்தக் கோரிக்கைக்கு நாமும் எமது ஆதரவைத் தெரிவித்து, அவர்களுடன் கைகோர்த்துள்ளோம்.

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் நிலப்பகுதியை அந்த மக்களின் கால்நடை வளர்ப்புச் செயற்பாடுகளுக்காக விடுவிக்க வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும். கால்நடை வளர்ப்பை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதார உரிமையைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


 

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget