Ads (728x90)

2027 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் கல்விக்கு 409 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி,சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்துக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலையான பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு வரவு-செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நிறைவடைந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்புகிறார். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீட்சிப் பெற்றுள்ளது. நாட்டின் நிதி ஒழுக்கம் பேணப்பட்டுள்ளது என சர்வதேச நிதி நிறுவனங்கள் சான்றுபடுத்தியுள்ளதை எதிர்க்கட்சித் தலைவர் அறியாமல் இருப்பது வேடிக்கையாகவுள்ளது. 

அரசியல் இலாபத்துக்காக ஏதும் பேசலாம் என்ற நிலையில் இருந்துக்கொண்டு கருத்துக்களை முன்வைக்க கூடாது. நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. 

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சித் தலைவர் அறியவில்லையா, தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் நினைவுப்படுத்துகிறார். 

எமது வாக்குறுதிகளை எமக்கு நினைவுப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

பாடசாலைகளுக்கு இதுவரையில் ஒரு ஸ்மார்ட் பலகைகள் கூட வழங்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார். ஆனால் இரண்டு ஆண்டு காலப்பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு 4,570 ஸ்மார்ட் பலகைகளும், 6,000க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு இணைய வசதிகளும்  வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர் கலாசாலைகளில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி மறுசீரமைப்புக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்துக்கு பொறுத்தமற்றது. கல்வி என்பது சிறந்ததொரு முதலீடாகும். கல்விக்கு 6 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற இலக்கை நிச்சயம் அடைவோம்.

அரச சேவையை அரசாங்கம் மலினப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார். இவர் கடந்த காலங்களில் எவ்வாறான அடிப்படையில் அரச சேவைக்கு நியமனங்களை வழங்கினார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். 

அரசியல் பரிந்துரைக்கு அமைய நாங்கள் எவருக்கும் நியமனங்களை வழங்கவில்லை. தகுதி மற்றும் போட்டிப்பரீட்சை ஊடாகவே அரச நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கல்வி தகைமைக்கு அமைய நியமனங்களை பெற்றால் தான் அரச சேவையாளர்கள் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் சேவையாற்றுவார்கள். விமர்சனங்களை அறிவுபூர்வமாக முன்வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியிடம் கேட்டுக் கொள்கிறோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக வரலாற்றில் முதன்முறையாக 749 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

 2025ஆம் ஆண்டில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பேண முடிந்துள்ளதாகவும், சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைத்துள்ளதாகவும், அரச சேவையில் இதுவரை சுமார் 40,000 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget