Ads (728x90)

 

இலங்கை நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனமான COOPFED மற்றும் Richwin குழுமம் ஆகியன இணைந்து தயாரிக்கும், ‘CoopFish’ ரகத்தின் 28 டின் மீன் உற்பத்திகளின் அறிமுக நிகழ்வு நேற்று முன்தினம் சீதுவை Hotel Royal Ramesses வளாகத்தில் நடைபெற்றது.

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும் கலந்துகொண்டார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, உள்நாட்டு டின் மீன் கைத்தொழிலைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் ஏற்கனவே இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், ஆண்டுதோறும் டின் மீன் உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலவாகும் 20 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு செலாவணியை நாட்டுக்குள் சேமிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இலங்கை நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தின் (COOPFED) தலைவர் கலாநிதி சாந்த ஜயரத்ன உரையாற்றுகையில், நாட்டிலுள்ள 305 கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் இயங்கும் சுமார் 4,000 விற்பனை நிலையங்கள் மற்றும் 8.2 மில்லியன் கூட்டுறவு உறுப்பினர்களைக் கொண்ட வலையமைப்பின் ஊடாக CoopFish உற்பத்திகளை நியாயமான விலையில் நாட்டின் அனைத்துக் கிராமங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த உற்பத்திகளை உள்நாட்டுச் சந்தையுடன் மட்டுப்படுத்தாமல் சர்வதேச சந்தைக்கும் ஏற்றுமதி செய்வதே தமது எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கி, கலைக்கப்பட வேண்டிய நிலையில் இருந்த COOPFED நிறுவனத்தை நான்கு மாதங்கள் போன்ற குறுகிய காலப்பகுதியில் இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டுவந்தமைக்காக, கலாநிதி சாந்த ஜயரத்னவுக்கு நிறுவனத்தின் ஊழியர்கள் விசேட கௌரவப் பரிசொன்றையும் வழங்கினர்.

Richwin குழுமத்தின் பணிப்பாளர் விகும் பெர்னாண்டோ உரையாற்றுகையில், தமது நிறுவனத்தின் மதுரன்குளிய மற்றும் காலி தொழிற்சாலைகள் ஊடாக நாளொன்றுக்கு 350,000 டின் மீன்களை உற்பத்தி செய்யும் திறன் காணப்படுவதாகத் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget