Ads (728x90)

 அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும், ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியாவுக்கு எதிராக, பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம், அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில், அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இனி, பொருளாதார தடையை நீக்க வேண்டுமானால், சபையின் அனுமதியை, அதிபர் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடும் அமலுக்கு வந்துள்ளது.

அமெரிக்க அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், இந்தாண்டு துவக்கத்தில் பதவியேற்றார். அதிபர் தேர்தலின் போது, ரஷ்யா தலையிட்டு, டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், தேர்தலில் முறைகேடுகளும் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

திடீர் நெருக்கம் : டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே, சமீபகாலமாக திடீர் நெருக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், அமெரிக்க தேர்தலில் தலையிட்டதுடன், உக்ரைன் மற்றும் சிரியாவில் கட்டுப்பாடு இல்லாமல் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம், அமெரிக்க பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டது.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான் மற்றும் உலக நாடுகளின் கட்டுப்பாடுகளை மீறி, தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வரும் வடகொரியா ஆகிய நாடுகள் மீதும், பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

அமெரிக்க பார்லிமென்டின், 'ஹவுஸ் ஆப் ரெபரன்சிடேடிவ்' என்ற, பிரதிநிதிகள் சபையில், இதற்கான ஓட்டுப்பதிவு, நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி, எம்.பி.,க்கள், ஒற்றுமையாக, இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தனர். அதன்படி, 419:3 என்ற ஆதரவுடன், தீர்மானம் நிறைவேறியது.

எதிர்பார்ப்பு : அடுத்து, மேல்சபையான, 'செனட்' சபையில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இரு கட்சிகளின், எம்.பி.,க்களும் ஒருமித்த கருத்துடன் இருப்பதால், இந்த தீர்மானம், செனட் சபையில் சுலபமாக நிறைவேறும் என,எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானத்தின்படி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை தளர்த்த வேண்டுமானால், பார்லிமென்டின் ஒப்புதலை, அதிபர் பெற வேண்டும்.

 இந்த தீர்மானம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புடினுடன், டொனால்டு டிரம்பும் சமீபகாலமாக நெருக்கமடைந்து வரும் நிலையில், அமெரிக்க, எம்.பி.,க்கள் அனைவரும் இணைந்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

நடவடிக்கை எடுக்க ஒபாமா தவறிவிட்டார் : ''மேற்காசிய நாடான சிரியாவில், ஐ.எஸ்., பயங்கரவாத பிரச்னை மற்றும் உள்நாட்டு பிரச்னை இருக்கும் போது, முந்தைய அமெரிக்க அதிபர், ஒபாமா சரியான நடவடிக்கை எடுக்காததால் தான், சிரியாவில், ரஷ்யா, ஈரானின் ஆதிக்கம் அதிகரித்தது,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

இந்த பிரச்னை குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: சிரியாவில் பயங்கரவாத பிரச்னை தீவிரமாக இருந்த போது, அதன் அதிபர் பஷார் அல் அசாத், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளார். இதற்கு, அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், ரஷ்யா போன்ற நாடுகள், அங்கு அதிகளவில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பு அளித்து விட்டார்.அதனால் தான், ரஷ்யா, ஈரான் போன்றவை, சிரிய அதிபருக்கு ஆதாரவாக, மனிதகுலத்துக்கு எதிராக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget