கொழும்பு: கொழும்பு டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அஷ்வின், சகா, ஜடேஜா அரைசதம் அடித்தனர்.இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1–0 என, முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கிறது.
முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (128), ரகானே (103) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் கூடுதலாக 5 ரன்கள் மட்டும் சேர்த்த புஜாரா, 133 ரன்னுக்கு அவுட்டானார். ரகானே (132), புஷ்பகுமாரா பந்தில் ‘ஸ்டம்டு’ ஆனார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த அஷ்வின், ஹெராத் பந்தில் சிக்சர் அடித்து அரைசதம் எட்டினார். தவிர, டெஸ்ட் அரங்கில் 2000 ரன்களை எட்டினார். இவரது அடுத்த பந்தில் அஷ்வின் (54) போல்டானார். பாண்ட்யா 20 ரன் எடுத்தார். அரைசதம் எட்டிய சகா, 67 ரன் எடுத்தார். ஜடேஜா தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். முகமது ஷமி 19 ரன் எடுத்தார். தேநீர் இடைவேளைக்குப் பின், இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 622 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜடேஜா (70), உமேஷ் யாதவ் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
பின் களமிறங்கிய இலங்கை அணி, இரண்டாவது நாள் முடிவில், முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்து, 572 ரன்கள் பின் தங்கியிருந்தது.
Post a Comment