
அத்துமீறிய இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும்போது கடலில் வீழ்ந்த இரு இந்திய மீனவர்களில் ஒருவர் 12 மணிநேரமும் மற்றொருவர் 4 மணிநேரமும் கடலில் தொடர்ந்து நீந்தி உயிர் தப்பினர்.
இந்திய புதுக்கோட் டையை சேர்ந்த பாலமுருகன் (வயது–25) மற்றும் செல்வமுருகன் (வயது –21) ஆகிய இருவருமே இவ்வாறு உயிர் தப்பினர். நெடுந்தீவை ஒட்டிய கடலில் நேற்றுமுன்தினம் இரவு இவர்கள் இருவரும் கடலில் வீழ்ந்தனர். தமது படகில் ஐவர் இருந்தனர் என்றும் கடற்படைப் படகு மோதியதில் தாம் இருவரும் கடலில் வீழ்ந்தனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
‘‘நாங்கள் கடலில் வீழ்ந்துவிட்டோம் என்று தெரிந்தும் எம்மைக் காப்பாற்றாமல் இலங்கைக் கடற்படையினர் சென்றுவிட்டனர்’’ என்றார்கள் அவர்கள். அவர்கள் வந்த படகில் இருந்த ஏனைய மூவரும் இவர்கள் இருவரையும் நீண்ட நேரம் தேடினர். எனினும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கடலில் வீழ்ந்தவர்களில் ஒருவர் சுமார் 4 மணிநேரம் நீந்திய பின்னர் நயினாதீவுக் கரையை அடைந்தார். மற்றையவர் 12 மணிநேரம் நீந்திய நிலையில் உள்ளூர் மீனவர்களின் படகைக் கண்டு உதவிகோரியதால் உயிர் பிழைத்தார். இருவரும் பின்னர் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று உள்ளுர் மீனவர்கள் தெரிவித்தனர்.
கடலில் வீழ்ந்த அவர்கள் இருவரையும் தேடிய அவர்களது படகில் இருந்தவர்கள் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் நேற்றுக் காலையில் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்த நிலையில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
‘‘எம்மோடு வந்தவர்களின் நிலை என்ன என்று தெரியாத நிலையில் நாம் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. அதனால் நாமாகவே கடற்படையினரிடம் வந்து சேர்ந்தோம்’’ என்று தெரிவித்தனர்.
தமது டோறா படகு மீனவர்களின் படகை மோதியது என்ற குற்றச்சாட்டைக் கடற்படையினர் மறுத்தனர். இலங்கைக் கடற்பகுதிக்குள் நுழைந்த இந்திய மீனவர்களே கைது செய்யப்பட்டனர் என்று அவர்கள் கூறினர். கடற்படையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக இந்த இருவரும் கடலில் குதித்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment