முதலமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்யும் வகையில் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மாகாண சபைத் தெரிவுக்குழுவை அமைக்கக் கோரும் பிரேரணை நாளைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரியவருகின்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையுடன் கலந்தாலோசித்த பின்னரே பிரேரணையை எப்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது என்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்று அறிய முடிகின்றது.
வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட 5 அமைச்சுக்களிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாக முறைகேடுகள், மோசடிகள் தொடர்பில் தெரிவுக் குழு அமைத்து விசாரணை செய்யக் கோரும் பிரேரணை, ஆளும் கட்சி உறுப்பினர் அ.பரஞ்சோதியினால் மாகாணசபையில் சமர்பிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பிரேரணையை சபை அமர்வில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத் தலைவரிடம் கோரியிருந்தார். மாகாணசபை உறுப்பினர்களே அது தொடர்பில் முடிவெடுப்பர் என்று அவைத் தலைவர் பதிலளித்திருந்தார். இல்லை அவைத் தலைவரே அந்த முடிவை எடுக்கலாம் முதலமைச்சரும் பதிலளித்திருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இடையேயான சந்திப்பின் பின்னர் இந்தப் பிரேரணையைக் கையாள்வது என்று தீர்மானிக்கப்பட்டு கடந்த சபை அமர்வில் விவாதத்துக்கு எடுக்கப்படவில்லை.
இருப்பினும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர் இடையேயான சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சி அதிருப்தியடைந்ததை அடுத்து தெரிவுக்குழுவைக் கோரும் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படக்கூடும் என்று ஊகங்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் மாகாணசபையின் நாளைய அமர்வுக்கான நிகழ்சி நிரலில் பிரேரணை சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட பிரேரணை, கைவிடப்பட்டதாகியுள்ளதால் மீளவும் அந்தப் பிரேரணை சமர்பிக்கப்பட்டவேண்டும் என்று வடக்கு மாகாண பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment