முந்தைய காங்., ஆட்சி காலத்தில் 2ஜி ஸ்பெக்டரம் உரிமம் ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.76 லட்சம் கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ.,யால் வழக்கு தொடரப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளிகளாக திமுக.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்குகளையும், அமலாக்கத் துறை தொடர்ந்த ஒரு வழக்கையும், நீதிபதி, ஓ.பி.ஷைனி தலைமையிலான, டில்லி, சிறப்பு கோர்ட் விசாரித்து வருகிறது. சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்குகளில், ஒன்றில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராசா, அந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி., கனிமொழி, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில், ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு எதிராக, 2011ல், சி.பி.ஐ., முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. 2008 ம் ஆண்டு முதல் நடந்து வரும் இவ்வழக்கில் இறுதிகட்ட வாதம் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு தேதியை டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் இன்று அறிவிக்க உள்ளது. பிற்பகல் 2.30 மணியளவில் இவ்வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட உள்ளது.
Post a Comment