தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்குத் தான் கட்டுப்பட்டு நடப்பதற்கு நிபந்தனை விதித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.‘‘தமிழ் அரசுக் கட்சிக் கொள்கைகளுக்கு கட்சித் தலைமைத்துவம் இன்னமும் விசுவாசமாக இருப்பதை பகிரங்கமாக அறிவித்தால், இடைக்கால அறிக்கையின் போதாமை பற்றி வெளிப்படுத்தினால், எவற்றை நாங்கள் அரசியல் ரீதியாகப் பெறவேண்டும் என்பதைப் பகிரங்கமாக அறிவித்தால், அவை கட்சியின் 2013 ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கைக்கு ஏற்புடையதாக இருந்தால் நான் கட்சி கூறுவதற்குக் கட்டுப்படுவேன்’’ என்று அவர் தெரிவித்தார்.
வடக்கு முதலமைச்சர் அவ்வப்போது ஊடகங்களுக்கு வெளியிடும் தனது கேள்வி பதில் அறிக்கையை நேற்றும் விடுத்தார். அதில் தெரிவிக்கப்பட்டதாவது:
கேள்வி: நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளதே?
பதில்: எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள். நான் எந்தக் கட்சியையும் நாடிச் செல்லவில்லை. எந்தக் கட்சியும் என்னைத் தமது கூட்டங்களுக்கு அழைத்ததுமில்லை.
கூட்டமைப்பு பதிவு செய்யப்படாதது தெரியாது கட்சி அரசியல் எதுவும் வேண்டாம் என்றிருந்த என்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் ஒருங்கே வந்து வலிந்து கேட்டபோது மறுக்க முடியாமல் அரசியலில் கால் வைத்தேன்.
நான் சேர முன் வந்தது அந்த ஐந்து கட்சிகள் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே. அப்போது அது பதிவு செய்யப்படாத ஓர் அரசியல் கூட்டமைப்பு என்பது கூடத் தெரியாதிருந்தது.
வன்முறை சாராத கட்சி என்ற வகையில் இயற்கையாகவே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் தான் எனது தொடர்புகள் சார்ந்திருந்தன. 2013ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கை எனக்குத் தரப்பட்டது. அதில் உள்ள கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டன. அதனை அடிப்படையாகக் கொண்டு என் அரசியல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டேன்.
கொள்கைக்கும் யதார்த்தும் இடைவெளி அதிகம்
கொள்கைகளுக்கும் விரவியிருந்த யதார்த்த நிலைக்கும் இடையில் பெரிய விரிசல் இருந்ததை நான் உணர்ந்தேன். கொள்கைகள் மக்களுக்கு. ஆனால் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் கட்சித் தலைமைப்பீடங்களுக்கே என்பதுதான் யதார்த்தமாக இருந்தது.
தேர்தல் அறிக்கையின் சிந்தனைக்கேற்ப இனப்படுகொலை சம்பந்தமான தீர்மானம் கொண்டுவரப்பட்டு எமது வடமாகாண சபையால் 1ஏக மனதாக ஏற்கப்பட்டபோது கட்சித் தலைமைத்துவம் அதிர்ச்சி அடைந்ததை நான் கண்டேன்.
அது சம்பந்தமான தலைமைத்துவக் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்ததையும் கண்டுகொண்டேன்.
பின்னர்தான் அறிந்துகொண்டேன், சிலருக்கு வரவிருந்த சுயநல வரவுகள் சில அந்தத் தீர்மானத்தால் போனதென்று. நாங்கள் மக்களிடம் வாக்கு கேட்கும்போது எமது கொள்கைகளை முன்வைத்தே கேட்கின்றோம். என்னைப் பொறுத்த வரையில் அவற்றை மாற்றி, குறைத்தோ கூட்டியோ நாங்கள் அரசிடம் எமது கோரிக்கைகளை முன் வைப்பது என்றால் அது மக்களின் கருத்துக்கிசைவாக நடைபெற வேண்டும். ஆகக் குறைந்தது கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கருத்தொருமிப்பின் அடிப்படையில் அவ்வாறான முரண்பட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும்.
மக்கள் சார்பாக மாறவேண்டும்
தலைமையே கூட்டுக் கட்சியின் கொள்கைகளை உதாசீனம் செய்யும்போது ஒருவர் என்ன செய்யவேண்டும்? ஒன்று வெளியேறவேண்டும். வெளியேறினால் உதாசீனம் செய்து நடந்துகொள்பவர்கள் கை ஓங்கிவிடும். இது எமது மக்களையே பாதிக்கும். மக்கள் பெருவாரியாக என்னைத் தேர்ந்தெடுத்த போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஒட்டு மொத்த கொள்கைகளின் அடிப்படையில்த்தான் தேர்ந்தெடுத்தார்கள்.
அவற்றிலிருந்து ஒரு கட்சியின் தலைமைத்துவம் வழுக முற்படும்போது கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் சார்பாக மாற்ற எத்தனிப்பதே எமது கடமை என்று உய்த்துணர்ந்தேன்.
கட்சித் தலைமைத்துவம் கட்சிக் கொள்கைகளை மாற்றும் போது உபயோகிக்கும் கருவிதான் கட்சி ஒழுக்கம் என்ற பிரம்பு. ‘‘நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யுங்கள். இல்லையேல் அடுத்த முறை உங்களுக்குக் கட்சித் துண்டு கிடைக்காது’’ என்பார்கள் அல்லது ‘‘நாங்கள் சொல்வதை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சென்றீர்கள் என்றால் அடுத்தமுறை உங்களுக்குத் துண்டு நிச்சயம்’’ என்பார்கள். அவ்வாறு கூறி உறுப்பினர்களைச் சதி வேலைகளில் ஈடுபடுத்தியமையும் உண்டு. தலைமையுடன் முரண்பட்டால் கட்சி ஒழுக்கத்தை மீறியமைக்குக் காரணம் கேட்பார்கள்.
கட்சிக் கொள்கைக்கு தலைமைத்துவம் கட்டுப்படவில்லை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு நான் நடக்கவில்லை என்று கூறும்போது அதே கட்சியின் கொள்கைக்குக் கட்டுப்படாத, கட்சித் தலைமைத்துவத்துக்கு நான் என்ன பதில் கூறமுடியும்? என்னை கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்திருந்தால் எமது முரண்பாடுகள் பற்றிக் கூறியிருப்பேன். அது நடைபெறாத நிலையில் எமது கொள்கை ரீதியான விடயங்களை வெளிப்படையாக மக்களுக்குக் கூறுவதே எமது கடமை என்று நான் நினைத்தேன். தவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல் என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது.
தேர்தல் அறிக்கை என்ன ?
தற்போதைய உள்ளூராட்சித் தேர்தலுக்கு எந்தத் தேர்தல் அறிக்கையை முன் வைத்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாக்குக் கேட்கின்றது என்பதைப் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். அப்பொழுதுதான் கட்சித் தலைமைத்துவத்திடம் சில கேள்விகளை மக்கள் கேட்கலாம். எமக்கு ஒன்றைக்கூறி அதற்கு மாறாக அரசுடன் நீங்கள் நடந்துகொள்ளும் நடவடிக்கையின் பின்னணி என்ன?
நெருக்குதல்கள் காரணம் எனின் யாரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்குதல்கள்? என்று இன்னோரன்ன கேள்விகளை மக்கள் கேட்க வழிவகுக்கவேண்டும்.
தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு நான் கூறும் பதில், பல தடவைகள் சிறை சென்ற போது நீங்கள் கொண்டிருந்த உறுதியான கொள்கைகளில் இருந்து நீங்கள் வழுவி விட்டீர்களா? ஏன்? பிறழ்வான கொள்கைகளுக்கு என்னைப் பணியச் செய்வதில் உங்களுக்கென்ன இலாபம்? – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Post a Comment