Ads (728x90)

தாய்நாடான மியான்மருக்கு திரும்ப அனுப்பும் நடவடிக்கையைக் கண்டித்து, வங்க தேசத்தில் அகதிகளாக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் நேற்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மியான்மரின் ரெக்கைன் பகுதியில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசித்தனர். அந்தப் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தின் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினர். அதில் போலீஸார் சிலர் பலியானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மியான்மர் ராணுவத்தினரும் புத்த மதத்தினரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.

அதனால் மியான்மரில் இருந்து தப்பி அண்டை நாடான வங்கதேசத்துக்குள் அகதிகளாகப் புகுந்தனர். சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேச முகாம்களில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மியான்மர் - வங்கதேச அரசுக்கு இடையே கடந்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 7.50 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்களை 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. அதன்படி முஸ்லிம்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் வங்கதேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலை மற்றும் அவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை ஆய்வு செய்ய ஐ.நா. பிரதிநிதி யாங்கீ லீ சில நாட்களில் வங்கதேசம் வர உள்ளார். இந்தச் சூழ்நிலையில், வங்கதேச அரசைக் கண்டித்து நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘‘எங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். மியான் மருக்குத் திருப்பி அனுப்பினால், அங்கு எங்கள் உயிர், உடைமைக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் வங்கதேசத்தில் பதற்றம் உருவாகி உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget