ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 37ஆவது கூட்டத் தொடரில் மார்ச் மாதம் 21ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அதில் பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்களால் கடும் அழுத்தம் இலங்கை மீது பிரயோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிடவுள்ளார். அதில் அவரும் தனது அதிருப்தியை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பன்னாட்டு மனித உரிமை கண்காணிப்பகம், ஐரோப்பிய ஒன்றியம் என்பன கடுமையான விமர்சனத்தை தற்போதே முன்வைத்துள்ள நிலையில், பன்னாட்டு அமைப்புக்கள் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் கடும் விமர்சனங்களை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துள்ள போதும் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயத்தில் இதுவரை சரியான முன்னேற்றம் காணப்படவில்லை என்று பன்னாட்டு அமைப்புக்கள் 37 ஆவது கூட்டத் தொடரில் சுட்டிக்காட்ட வுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஹூசைனின் இலங்கை தொடர்பான அறிக்கையைத் தொடர்ந்து அரசின் சார்பில் அறிக்கை முன்வைக்கப்பட்டவுள்ளது. அயலுறவுத்துறை அமைச்சர் இலங்கையின் சார்பில் அறிக்கையை முன்வைப்பார் என்பதுடன் இலங்கையானது ஜெனிவா பிரேரணை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.
இலங்கை பிரேரணையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவுள்ளது என்று கூறவுள்ள அரசு பிரேரணையை நடைமுறைப்படுத்துவதில் காணப்படுகின்ற சவால்கள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளது.
Post a Comment