ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்த ராணுவத் தாக்குதல் ஒத்திகையில் பொதுமக்கள் பங்கேற்றனர்.வட கொரியாவின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை காரணமாக அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ராணுவத் தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட்டது.
டோக்கியோவிலுள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் நேற்று திடீரென ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏவுகணை செலுத்தப்பட்டிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடங்களுக்குள்ளோ அல்லது சுரங்கப் பகுதிகளுக்கோ செல்ல வேண்டும் என்று கூறப்பட்டது.
மேலும் அந்த பொழுதுபோக்கு பூங்காவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் வேகமாக ஓடிவந்து, ஏவுகணை செலுத்தப்பட்டுவிட்டது. ஏவுகணை செலுத்தப்பட்டு விட்டது என்று கூவியபடியே ஓடினார். இதையடுத்து பூங்காவிலிருந்து 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியை காலி செய்து அருகிலிருந்த கட்டிடங்களுக்குள்ளும், சுரங்கப் பாதைக்குள்ளும் தஞ்சமடைந் தனர்.
சில நிமிடங்களுக்குப் பின்னர் ஒலிபெருக்கியில் அடுத்த அறிவிப்பு வெளியானது. செலுத்தப்பட்ட ஏவுகணை கடந்து சென்றுவிட்டதாகவும், கிரேட்டர் டோக்கியோ பகுதிக்கு மேலே, பசுபிக் பெருங்கடல் பகுதியில் அது பறந்து சென்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வெளியில் வந்தனர். இந்த ஒத்திகை பற்றி அறியாத பொதுமக்கள் சிலர் இதனால் பீதியடைந்தனர். இது ராணுவ தாக்குதல் ஒத்திகை என்று அதிகாரிகள் அறிவித்த பின்னர் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
2-ம் உலகப் போருக்குப் பிறகு இதுபோன்ற ஒத்திகை நடந்ததால் அப்பகுதி மக்கள் சிலர் மிகவும் பீதியில் ஆழ்ந்தனர். ஜப்பான் நிலநடுக்க பூமி என்பதால் அடிக்கடி அங்கு இதுபோன்ற ஒத்திகைகள் நடப்பது சாதாரணம்தான். ஆனால் ஏவுகணை, ராணுவத் தாக்குதல் ஒத்திகைகள் இப்பகுதி மக்களுக்கு புதிதானவை.
வட கொரியாவின் அணு ஆயுதப் போராட்டத்தின் காரணமாகவே இதுபோன்ற ஒத்திகை நடத்தப்பட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
Post a Comment