தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் வேட்பாளரோ, வாக்காளரோ கைது செய்யப்பட்டால் தேர்தல் முடிவடையும் வரை அவர்களுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றால் பிணை வழங்கப்பட மாட்டாது என்று யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.54 கிலோ கஞ்சா போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்குப் பிணை கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மேல்நீதிமன்றில் நேற்று நடைபெற்றது. அதன்போதே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது:-
தேர்தல் ஆணையகம் நீதியான, ஜனநாயக தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நீதிமன்றங்கள் செயற்பட வேண்டும். யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நியாயாதிக்கு எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் பாரதூரமான குற்றங்களுக்குத் தேர்தல் முடிவடையும் காலம் வரையில் பிணை வழங்கப்படமாட்டாது.
யாழ்ப்பாணத்தில் இதுவரை பாரதூரமான தேர்தல் வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை. ஒரு சில வாள் வெட்டுச் சம்பவங்கள், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களைப் பொலிஸார் தேடி வருகின்றார்கள். கொலை , கொள்ளை வாள்வெட்டு சம்பவங்கள் போன்ற சமூக விரோத செயல்களுக்குத் தேர்தல் காலத்தில் பிணை வழங்கினால் தேர்தல் கால வன்முறைகளை அதிகரித்து விடலாம்.
பாரதூரமான குற்றங்களுக்கு தேர்தல் முடிவடையும் வரையில் பிணை வழங்க முடியாது. அவை தொடர்பான அனைத்து வழக்குகளும், தேர்தல் முடிவடைந்த பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னரே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
Post a Comment