மகிந்த காலத்தில் இடம்பெற்ற பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளைத் தீமூட்டிக் கொளுத்தி தண்டனைகளிலிருந்து தப்புவதற்காகவே மீண்டும் ஆட்சிபீடமேறுவதற்கு மகிந்த அணி துடிக்கின்றது.இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
வெள்ளவாயவில் நேற்று நடத்தப்பட்ட சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவித்தாவது,
ஜி.எல்.பீரிஸ் ஒரு பேராசிரியர். சட்டம் படித்தவர் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் அவருக்கு ‘அ’ கூட தெரியாது.அவ்வாறானவர்கள்தான் இன்று பண்டாரநாயக்கவின் கொள்கை பற்றி பேசுகின்றனர்.
ஆட்சியில் இருக்கும்போது அடித்த கொள்ளைகளே அளவற்றதாக இருக்கும் நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறத்தையும் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி (மகிந்த அணி) கொள்ளையடித்துள்ளது. இப்படியான கொள்ளையர்கள்ளே இன்று பண்டாரநாயக்கவின் பயணம் குறித்து பேசுகின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
ஊழல், மோசடிகளை ஒழித்து நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது பிரதான நோக்கம். அந்த இலக்கை அடைந்தே தீருவேன். அதற்கு மக்களும் ஆதரவு வழங்கவேண்டும். பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பான 34 விசாரணை அறிக்கைகளும் வெளிவந்துள்ளன.
பெருந்தலைகளும் மோசடியுடன் தொடர்புபட்டுள்ளன. தகுதி தராதரம் பாராது குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை உறுதியாக கூறிவைக்க விரும்புகின்றேன்.
பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கையையும் முழுமையாக நடைமுறைப்படுத்துவேன். மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக ஒரு குழு முயற்சிக்கின்றது. ஆட்சியிலிருந்தபோது செய்த மோசடிகளை மூடிமறைப்பதற்காகவும், விசாரணை அறிக்கைகளைக் கொளுத்திவிட்டு, தண்டனையிலிருந்து தப்புவதற்காகவுமே அந்தக் குழு துடிக்கின்றது. அதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
மகாநாயக்க தேரர்களின் சொற்படியே செயற்படுவேன். அவர்கள் சொல்வதை நிச்சயம் செய்வேன். ஏனைய மதத் தலைவர்களின் கருத்துகளுக்கும் செவிமடுப்பேன். நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்படாத வகையில் நல்லிணக்க நடவடிக்கைகள் இடம்பெறும் என்றார்.
Post a Comment