கடந்த வாரம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களிடையே ஏற்பட்ட கைகலப்புத் தொடர்பில் கலைப் பீடத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் விசாரணைக்காக இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை நேற்றுமுன்தினம் இரவு கைகலப்பில் ஈடுபட்டவர்கள் கலைப்பீட மாணவர்கள் அல்ல என்று கலைப்பீட மாணவ ஒன்றியம் தெரிவித்தது.
கடந்த வாரம் மாணவர்களிடையே நடந்த கைகலப்பில் கலைப்பீட மாணவர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் மருத்துவமனையிலிருந்து தாமாகவே வெளியேறிச் சென்றனர். கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 ஆம், 4 ஆம் வருடங்களைச் சேர்ந்த 6 மாணவர்கள் தற்காலிகமாக பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணை முடியும் வரை அவர்கள் பல்கலைக்கழகத்தினுள் உள்வாங்கப்படமாட்டார்கள் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் இரவும் திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த வார இறுதியில் 3ஆம் 4 ஆம் வருட மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டதன் பின்னணியிலேயே இந்தக் கைகலப்பு இடம்பெற்து என்று கூறப்பட்டது. ஆனால் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அதனை மறுத்துள்ளது.
கைகலப்பில் ஈடுபட்டது கலைப்பீட மாணவர்கள் அல்ல என்றும் முகாமைத்துவ பீட பெரும்பான்மையின மாணவர்களே என்றும் கலைப்பீட மாணவர்களுக்கும் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற கைகலப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் கலைப்பீட மாணவ ஒன்றியம் தெரிவித்தது.
Post a Comment