தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிதவாதக் கட்சியாக தெற்கில் செயற்பட்டாலும், இனவாதக் கட்சியாகவே வடக்கில் செயற்படுகின்றது. அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அணியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும்.இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தெற்கில் மிதவாதக் கட்சியாக அடையாளம் காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் இனவாத ரீதியில் தேர்தல் பரப்புரைப் பணியில் ஈடுபட்டுவருகின்றமை கவலைக்குரியது.
தெற்கில் தூய்மையான ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ன செய்கின்றனரோ அதையே வடக்கில் கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கின்றது.
கூட்டமைப்பு ஒரு விடயத்தை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். பெப்ரவரி 10ஆம் திகதியுடன் தேர்தல் முடிந்துவிடும். அதன் பின்னரே சரியான அரசியல் போக்கு ஆரம்பமாகும்.
அரசியல் தீர்வுக்கான முயற்சிகளும் நடக்கின்றன. அரசியல் தீர்வுத்திட்டத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமாகும்.
அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் கூட்டமைப்பு மைத்திரியின் அணியிலேயே இருக்கவேண்டும்.
இதனை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உணர்ந்து கொள்வார் என்று நம்புகின்றோம் என்றார்.
Post a Comment