தென்னிலங்கையில் இலங்கை அரசை எவ்வாறு கவிழ்க்கலாம் என்று சதி இடம்பெறுகின்றதோ அதேபோல வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பைச் சிதறடிக்க முழு வீச்சில் சதி இடம்பெற்று வருகின்றது.இவ்வாறு தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராசா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது திட்டமிட்ட வகையில் பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் தமிழரசுக் கட்சியை இல்லாது ஒழிக்கும் முயற்சியில் சிலர் களமிறங்கியுள்ளனர்.
நாங்கள் கொலையாளிகள் அல்லர். கொள்ளையர்களும் அல்லர். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி இலஞ்சம் வாங்கினார் என்று தெரிவித்தார் என்று ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தேன்.
நான் சாகடிக்கப்படும் காலத்தில் கூட கண்ணீர் விட்டதில்லை. சாதராணமாக பல விடயங்களுக்கு கண்ணீர் விட்டுள்ளோம். நேற்று ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றை பார்த்தேன். முழுக்க முழுக்க தேர்தல் பரப்புரைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொய்யை கூறியுள்ளார். அது மக்களின் அபிவிருத்திக்காக கொடுக்கப்பட்ட திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஆகும். இது அரச வழமை ஆகும்.
என்றும் இல்லாதவாறு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முன்னாள் போராளிகளுக்காக விசேட வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்த முறையும் எமது மக்களுக்காக 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படவுள்ளது.
இவ்வாறு பல சாதகமான விடயங்கள் இருந்தமையாலேயே நாம் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு கொடுத்தோம். இந்த நிலையில் மிகப் பெரிய பொய்யை ஊடகம் வெளியிட்டுள்ளது. அதைப் பார்த்து நான் கண்ணீர் விட்டேன். இந்த விடயத்தை சும்மா விடப் போவதில்லை. இதற்கு நாம் முழுமையாக விளக்கத்தை ஆதாரத்துடன் வழங்கவுள்ளேன்.
அந்த உறுப்பினர் கூறுவது போல நாம் வெறுமனே 2 கோடி ரூபாவுக்குத்தான் விலை போக வேண்டுமா?. விலை போவதாக இருந்தால் எத்தனையோ மில்லியன் ரூபாயை கேட்டிருப்போம். நாம் அவ்வாறான மனநிலையுடன் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. இங்குள்ள பல சிறு கட்சிகள் எல்லாம் அமைச்சுப் பதவியை தக்க வைத்துள்ளன. முன்னைய காலத்திலும் அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ளனர். நாம் அமைச்சுப் பதவிகள் கூட வேண்டாம் என்று கூறி மக்களுக்காகப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
தற்போதைய அரசிலும் கூட எம்மை அமைச்சுப் பதவியை ஏற்க வேண்டும் என்று கோரியிருந்தார்கள். நாம் அதனை நிராகரித்து தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி வருகின்றோம். எம்மீது திட்டமிட்டு சில பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாக வெளிவந்த செய்தி தொடர்பாக நாம் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். சட்டத்தரணிகளுடன் ஆலோசனை செய்து வருகின்றோம். இந்த விடயத்தை நாம் சும்மா விடமாட்டோம்.என்றார்.
Post a Comment