Ads (728x90)

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

அந்தப் பள்ளியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள் அதிகமானோர் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மூவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில், "புளோரிடாவின் பார்க்லாண்டில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் மேல்நிலைப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நிகோலஸ் க்ரூஸ் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவருக்கு வயது 19. அந்த நபரின் இணையபக்கம் அவரது சமூக ஊடக பக்கங்களை ஆய்வு செய்து வருகிறோம். விசாரணையில் எப்பிஐ புலணாய்வு நிறுவனமும் எங்களுக்கு உதவி வருகிறது. நடத்தை கோளாறு காரணமாக நிக்கோலஸ் க்ரூஸ் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். நிக்கோலஸிடம் இருந்து அதிக அளவில் துப்பாக்கி மேகசின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நிகோலஸையும் பிடித்து விசாரித்து வருகிறோம்.

பலியான 17 பேரில் 12 பேர் பள்ளி வளாகத்துக்குள்ளும் ஒருவர் வளாகத்துக்கு வெளியிலும் மற்றும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் பலியாகியுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இருப்பினும் இவர்களில் எத்தனை பேர் பள்ளி மாணவர்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்திய வம்சாவளி மாணவர் ஒருவரும் இத்துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப் கண்டனம்

புளோரிடா துப்பாக்கிச் சூட்டுக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "புளோரிடா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்கப் பள்ளியில் பயிலும் எந்த ஒரு குழந்தையும் பயிற்றுவிக்கும் எந்த ஒரு ஆசிரியரும் பாதுகாப்பற்று உணரக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget