தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா பதவி விலகியுள்ள போதிலும், அவரை பயன்படுத்தி பெருமளவு முறைகேடு செய்து பல கோடி ரூபாய் செல்வம் குவித்த இந்திய வம்சாவளி குப்தா குடும்பத்திற்கு எதிராகவும் மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன.கடந்த 2009-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்க அதிபராக ஜேக்கப் ஜுமா பதவியேற்றார். அதற்கு முன்பாக அவர் துணை அதிபராக இருந்தபோது 1999-ல் ராணுவத்துக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2014-ம் ஆண்டில் அரசுப் பணத்தில் சொகுசு வீடு கட்டியது, அரசு ஒப்பந்தங்களை குப்தா குழுமத்துக்கு முறைகேடாக ஒதுக்கியது உள்ளிட்ட பல்வேறு ஊழல் விவகாரங்களில் ஜுமா மீது குற்றம் சாட்டப்பட்டது. எதிர்கட்சிகளின் போராட்டத்தையடுத்து, தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா நேற்று (புதன்கிழமை) அவரது பதவியை ராஜினாமா செய்தார்.
அதிபராக இருந்த ஜுமாவின் ஊழல்களுடன் தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குப்தா குடும்பத்தின் முறைகேடுகள் பற்றியும் அங்கு பெரிய அளவில் புகார்கள் எழுந்துள்ளன. குப்தா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் நேற்று இரவு சோதனையும் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment