Ads (728x90)

கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இரட்டைத் தங்கம் வெல்லும் முனைப்பில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் பயணமாகவுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அடுத்தமாதம் ஆஸ்திரேலியாவிலுள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ளன.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 3 தங்கப் பதக்கங்களை சரத் கமல் வென்றுள்ளார். இதில் 2 பதக்கங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியின்போது வென்றவை ஆகும். எனவே இந்த முறையும் 2 தங்கங்களை வெல்லும் முனைப்பில் இருக்கிறார் சரத் கமல். அநேகமாக இது அவருக்கு கடைசி காமன்வெல்த் போட்டியாக இருக்கும் என நம்பப்படுகிறது. சர்வதேச தரவரிசையில் 71-வது இடத்தில் இருக்கிறார் சரத் கமல்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த முறை காமன்வெல்த் போட்டிகள் ஏப்ரல் 4 முதல் 15 வரை நடைபெறவுள்ளன. இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற கத்தார் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசையில் 7-ம் இடத்திலுள்ள கோகி நிவாவை வீழ்த்தினேன். என்னுடைய டேபிள் டென்னிஸ் வரலாற்றில் இதை மிகச் சிறந்த வெற்றியாகக் கருதுகிறேன்.

எங்களுக்கு இந்த முறை நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒற்றையர், அணிப் பிரிவு, இரட்டையர், கலப்பு இரட்டையர் என 4 பிரிவுகளில் விளையாடவுள்ளோம். ஆடவர் பிரிவில் இந்திய அணி வலுவானதாக உள்ளது. எனவே 2 பிரிவுகளில் தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளோம்.

சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் 6 பேர் முதல் 100 இடங்களுக்குள் உள்ளனர்.

கடந்த முறை கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின்போது இந்தியாவுக்கு ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. ஆனால் இந்த முறை கூடுதல் பதக்கங்களைப் பெறுவோம். கிளாஸ்கோ போட்டியின்போது இந்திய அணிக்கு கடும் போட்டி இருந்தது. ஆனால் இந்த முறை இந்திய வீரர்கள் முன்னேறிய நிலையில் உள்ளனர். எனவே கோல்ட் கோஸ்ட் போட்டிகள் இந்தியாவுக்கு வெற்றியைத் தரும்.

இந்த முறை சிங்கப்பூர், இங்கிலாந்து அணிகள் வலுவானதாக இருக்கும். சிங்கப்பூர் வீரர் காவோ நிங், தரவரிசையில் 33-வது இடத்தில் இருக்கிறார். அவர் இந்திய வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் இருப்பார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் காமன்வெல்த் போட்டிகளுக்காக நாங்கள் தயாராகி வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பட்டம் வென்றதன் மூலம் நான் உடல் அளவிலும், மனதளவிலும் வலுவடைந்துள்ளேன். என்னுடைய முன்கை ஆட்டம் எனக்கு மிகப்பெரிய சொத்தாகும். இப்போது பின்கை ஆட்டத்திலும் தேறி வருகிறேன்.

ஒற்றையர் பிரிவில் சக நாட்டு வீரர்கள் சவும்யஜித் கோஷ் (தரவரிசையில் 58-வது இடம்), ஜி.சத்யன்(தரவரிசையில் 49-வது இடம்) ஆகியோர் எனக்கு சவால் அளிப்பார்கள். சொந்தநாட்டு வீரர்களுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினமான விஷயம். மற்ற நாட்டு வீரர்களை வெல்வதைத்தான் நாம் விரும்புவோம். கோல்ட் கோஸ்ட் நகரில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்” என்றார்

Post a Comment

Recent News

Recent Posts Widget