Ads (728x90)

ஜனாதிபதியோ, பிரதமரோ தெரிவிக்கும் வரையிலும் நான் காத்திருக்கமாட்டேன் எனத் தெரிவித்த பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, “தகுதியை இழந்திருந்தால் பதவியைத் தூக்கியெறிந்திருப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

“பதவிக்காக என்னுடைய கொள்கையை நான் கைவிடுபவன் அல்ல. அதேபோல பதவியைப் பார்த்து செயற்படுவதும் என்னுடைய கொள்கை அல்ல” என அவர் மேலும் தெரிவித்தார்.

குருநாகல், வெலகெதர விளையாட்டரங்கில், நேற்று (09) இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவாக, அமைச்சர் என்றவகையில் நான் வாக்களித்திருந்தால் நான் என்னுடைய தகுதியை இழந்தவனாகவே நினைப்பேன்” என்றார்.

“அதன்பின்னர், அமைச்சுப் பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு, அரசாங்கத்திலிருந்து விலகியிருப்பேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கே, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவைப்பட்டது. என்றாலும், அது ​தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், அப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், தங்களுடைய பதவிகளை தக்கவைத்துக்கொள்வதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

“நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்கள் பற்றி ஜனாதிபதியும் பிரதமரும் முடிவெடுப்பார்கள். அதனை நாங்களும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஏதாவது தவறு இடம்பெறுமானால் நாங்கள் அது பற்றிக் கட்டாயம் கேட்போம்” என்றார்.

“இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குள் சுதந்திர கட்சியைச் சேர்ந்த பலர் மாட்டிக்கொண்டனர். அதில் சிலர் ஆதரவாக வாக்களித்து ஜனாதிபதியை தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளிவிட்டனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எது எவ்வாறாக இருப்பினும், இந்தப் பிரேரணையின் மூலமாக எமது அரசாங்கம் பலமடைந்துவிட்டது. ஆகையால், ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்” என்றார்.

“பாரிய கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் எவரும் கடந்த மூன்றாண்டுகளுக்குள் பிடிபடவில்லை. திருடர்களையும் பிடிக்கவில்லை. இந்நிலையில், அவ்வாறானவர்கள் தொடர்பில் துரித நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என வலியுறுத்திய அவர், “அரசியல்வாதி என்றவகையில், சட்டத்தை கையிலெடுப்பது சரியில்லை. சட்டரீதியில் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுப்பதே முறையான வழிமுறையாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget