ஆக்ராவில் அமைந்துள்ள இந்தியாவின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த தாஜ் மஹாலின் இருவேறு நுழைவு வாயிலில் அமைந்துள்ள இரண்டு உயரமான மினார் அமைப்புகள் புயலால் சேதமடைந்துள்ளன.மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் 12 அடி உயரத் தூண்கள் உடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதான அமைப்பை சுற்றியுள்ள 4 மிக உயரமான கோபுரங்கள் கம்பீரமாக நிற்கின்றன.
17ம் நூற்றாண்டை சேர்ந்த கல்லறை நினைவுச் சின்னமான தாஜ் மஹாலை ஒரு நாளில் 12 ஆயிரம் பேர் சுற்றிப் பார்க்கின்றனர்.
உலகிலேயே மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக தாஜ் மஹால் விளங்கி வருகிறது.
இந்த நினைவுச் சின்னத்தின் முதல் தோற்றத்தை சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் முதன்மை வாயிலில் அமைந்திருக்கும் உயரமான மினார் ஒன்று உடைந்துள்ளது.
தெற்கு நுழைவாயிலில் அமைந்துள்ள இன்னொன்றும் உடைந்துள்ளது.
சேதமடைந்துள்ள அமைப்புக்களை மீண்டும் கட்டியமைக்கும் பணி தொடங்கிவிட்டது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மொகலாய மன்னர் ஷாஜஹான் தன்னுடைய மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ் மஹாலை கட்டியதாக இந்தியாவின் அதிகாரபூர்வ வரலாறு குறிப்பிடுகிறது.
வெள்ளைப் பளிங்குக்கல் குவிமாடம் மற்றும் உயர்ந்த கோபுரங்களோடும், விலையுயர்ந்த கற்கள் மற்றும் சிற்பங்களோடும் கூடிய இந்த நினைவுச் சின்னத்தின் சிக்கலான கட்டட அமைப்பு மொகலாய கட்டடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது.
சமீப காலமாக மாசுபாடுகள் மற்றும் கட்டுமானப் பணிகளால் தாஜ் மஹால் சேதமடைந்துள்ளது.
ஆக்ராவில் அதிகரித்துள்ள மாசுபாடுகளின் அளவால் தாஜ் மஹால் அதனுடைய பளபளப்பையும், கட்டமைப்பையும் இழந்துவிடும் ஆபத்து இருப்பதாக தாஜ் மஹாலை பாதுகாத்து வரும் இந்திய தொல்லியல் துறை ஜனவரி மாதம் தெரிவித்தது.
Post a Comment