Ads (728x90)

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2 வருடங்கள் தடைக்குப் பிறகு திரும்பி உள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது. மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ 30 பந்துகளில் 68 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு பிரதானமான காரணமாக இருந்தார்.

51 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்களை இழந்து நம்பிக்கை தளர்ந்திருந்த நிலையில் பிராவோ சரிவில் இருந்து அணியை மீட்டிருந்தார். கடைசி 3 ஓவர்களில் 48 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் தனது அசாத்தியமான பேட்டிங்கால் வெற்றியை சாத்தியமாக்கினார். அதிலும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற திறமையான பந்து வீச்சாளருக்கு எதிராக பிராவோ மட்டையை சுழற்றியது பிரம்மிக்க வைத்தது.

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவையாக இருந்த சூழ்நிலையில் தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தால் தன்னால் ஒரு அடி கூட ரன் சேர்ப்பதற்காக ஓட முடியாது என்ற சூழ்நிலையில் முதல் 3 பந்துகளை வீணடித்த கேதார் ஜாதவ் அடுத்த இரு பந்துகளையும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டி வெற்றியை பதிவு செய்த விதம் சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு பெருக்கி உள்ளது.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர்களான ஷேன் வாட்சன், அம்பாட்டி ராயுடு ஆகியோரும் அவர்களை தொடர்ந்து களம் புகுந்த சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஆகியோரும் பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை வழங்கத் தவறினர். பிராவோவின் அதிரடி, கேதார் ஜாதவின் சாமர்த்தியம் ஆகியவை எடுபடாமல் இருந்திருந்தால் அந்த ஆட்டத்தில் சென்னை அணி மிகப்பெரிய அளவிலான தோல்வியை சந்தித்திருக்கும்.

இதேபோல் பந்து வீச்சில் மார்க் வுட், வாட்சன், தீபக் ஷாகர் ஆகியோர் சற்று நெருக்கடி கொடுத்த போதிலும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் கைப்பற்றத் தவறினர். இதனால் இன்றைய ஆட்டத்தில் அணியில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும். முரளி விஜய், ஷர்துல் தாக்குர் ஆகியோர் விளையாடும் லெவனில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. 2 வருடங்களுக்குப் பிறகு சொந்த மைதானத்தில் களமிறங்கும் சென்னை அணி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை மேற்கொள்ளக்கூடும்

அதேவேளையில் புதிய கேப்டனான தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்த சீசனை விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் ஆட்டத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை நேற்று முன்தினம் தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் சிங்கத்தை (சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை) அதன் குகையிலேயே இன்று சந்திக்கிறது கொல்கத்தா.

பெங்களூரு அணிக்கு எதிராக நித்திஷ் ரானா, சுனில் நரேன் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக சிறப்பான பங்களிப்பை வழங்கினர். 177 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் சுனில் நரேன் 19 பந்துகளில் 50 ரன்கள் விளாசி மிரட்டினார். பந்து வீச்சிலும் சுனில் நரேன் சோடை போகவில்லை. 4 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தார். அதேவேளையில் நித்திஷ் ரானா பந்து வீச்சில் டிவில்லியர்ஸ், விராட் கோலி ஆகியோரது விக்கெட்களை ஒரே ஓவரில் அடுத்தடுத்து வீழ்த்தி அந்த அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.

மேலும் பேட்டிங்கில் 25 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து அசத்தினார். இந்த கூட்டணியிடம் இருந்து மேலும் சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இவர்களைத் தவிர தினேஷ் கார்த்திக்கும் பேட்டிங்கில் 35 ரன்கள் சேர்த்து தனது பங்களிப்பையும் நேர்த்தியாக வழங்கியிருந்தார். ஆட்டம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையிலும் தினேஷ் கார்த்திக் அவசரம் காட்டாமல் இறுதி வரை நிதானமாக பேட் செய்த விதம் பாராட்டுக்குரிய வகையில் அமைந்தது.

கொல்கத்தா அணி கடைசி கட்ட பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அனுபவ வேகப்பந்து வீச்சாளரான வினய் குமார் தனது முதல் ஓவரில் 14 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மேலும் கடைசி ஓவரில் 16 ரன்களை தாரைவார்த்தார். எனினும் மற்ற பந்து வீச்சாளர்களான பியூஸ் சாவ்லா, மிட்செல் ஜான்சன், சுனில் நரேன் ஆகியோர் சிறப்பாகவே செயல்பட்டனர். இவர்களில் ஜான்சன், சென்னை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடித் தரக்கூடும். பேட்டிங்கில் முதல் ஆட்டத்தில் சோபிக்க தவறிய கிறிஸ் லின், ஆந்த்ரே ரஸல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.

சுனில் நரேனுக்கு எதிராக பெங்களூரு அணியினர், சரியான கள வியூகம் அமைக்கத் தவறினர். அதாவது வாஷிங்டன் சுந்தரும், கிறிஸ் வோக்ஸூம் ஒரே நீளத்தில் பந்து வீசினர். இவை, சுனில் நரேன் பெரிய அளவில் ஷாட் மேற்கொள்வதற்கு உதவிகரமாக அமைந்தது. மேலும் லாங்-ஆப், டீப் மிட்விக்கெட் திசையிலும் பீல்டர் நிறுத்தப்படாததை சுனில் நரேன் நன்கு பயன்படுத்திக் கொண்டார். இதனால் இந்த விஷயத்தில் சென்னை அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். சுனில் நரேன் விக்கெட்டை விரைவாக கைப்பற்றும் பட்சத்தில் அந்த அணியின் ரன்குவிப்பை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

அணி விவரம்

சென்னை: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், அம்பாட்டி ராயுடு, கரண் சர்மா, ஷர்துல் தாக்குர், டு பிளெஸ்ஸிஸ், மார்க் வுட், சேம் பில்லிங்ஸ், இம்ரன் தகிர், தீபக் ஷாகர், லுங்கி நிகிடி, கே.எம்.ஆசிப், என்.ஜெகதீசன், கனிஷ்க் சேத், மோனு சிங், துருவ் ஷோரே, கிஷித்ஸ் சர்மா, சைதன்யா பிஷ்னோய், ஹர்பஜன் சிங்.

கொல்கத்தா: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), கிறிஸ் லின், சுனில் நரேன், ஆந்த்ரே ரஸல், ராபின் உத்தப்பா, குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, நிதிஷ் ரானா, நாகர்கோட்டி, ஷிவம் மாவி, ஜான்சன், சுப்மான் கில், வினய் குமார், ரிங்கு சிங், டெல்போர்ட், ஜவோன் சீயர்லெஸ், அபூர்வ் வான்கடே, இஷாங் ஜக்கி, டாம் குர்ரன்.

Post a Comment

Recent News

Recent Posts Widget