கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள இடர் காரணமாகச் சுகாதார நெருக்கடி ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளச் சுகாதாரத் திணைக்களத்தினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்டச் செயலர் சு.அருமைநாயகம் பிராந்திய சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் சகல குளங்களும் வான்பாய்கின்றன. இரணைமடுக் குளத்து நீரும் அதிகளவில் வெளியேறுகின்றது. மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடிதண்ணீர்க் கிணறுகள் பலவற்றுக்குள் வெள்ளம் சென்றுள்ளதால் அத்தகைய கிணறுகளிலிருந்து தண்ணீரைப் பெறமுடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் குளிர் அதிகமாகக் காணப்படுகிறது. இதனாலும் மக்களுக்குக் குறிப்பாகச் சிறார்களுக்கு ஆரோக்கியக் குறைபாடு ஏற்படலாம்.
பற்றைகள், நிலங்கள் , காடுகள் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியுள்ளதால் விச ஜந்துக்களான பாம்பு, தேள் உள்ளிட்டவை வெள்ளத்துடன் வரவாய்ப்புள்ளன. நுளம்பு பெருகவும் வாய்ப்புள்ளது. அவற்றால் சகலருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
பாதைகள் பல தடைப்பட்டுள்ளன. அவசரப் பொருள் கொள்வனவு, மருத்துவமனைகளுக்குச் செல்லும் பாதைகளிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்படுமானால் சிக்கல் வரலாம் என்று கருதப்படுவதால் மேற்கண்ட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மருத்துவர்கள், இவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர் கூறியுள்ளார்.
மாவட்டச் செயலரின் அறிவுறுத்தல் கிடைத்தது. மருத்துவ சேவைகள் தடையின்றி இடம்பெறுவதற்கான சகல கண்காணிப்புக்களும் இடம்பெறுகின்றன. இதுவரை எங்கும் அதிகமான நோயாளர் என்ற நிலமை உருவாகவில்லை என்று கிளிநொச்சிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சி. குமாரவேல் தெரிவித்தார்.
தர்மபுரம் பிரதேச மருத்துவமனைக்குள் நேற்று முன்தினம் வெள்ளம் புகுந்ததால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன. நோயாளர்கள் சகலரும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இன்றும் வெள்ளம் வழிந்தோடவில்லை.
அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்கு முறிகண்டி ஊடாகச் செல்லும் பாதை முற்றாகத் தடைப்பட்டுள்ளது. எனினும் கோணாவில் ஊடான போக்குவரத்துப் பாதிக்கவில்லை. சுகாதாரப் பணிகள் வழமைபோன்று இடம்பெறுகின்றன என்றும் மருத்துவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு மேலதிக சிகிச்சை தேவைப்படின் யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்படுவர் என்றார்.
Post a Comment