வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலருக்கு நீண்ட காலமாக நிலுவைக் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. கல்வித் திணைக்களம் உரிய கவனம் இன்றிச் செயற்படுகிறது என்று ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் நூற்றுக் கணக்கான ஆசிரியர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகள் 5 ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாது இழுத்தடிக்கப்படுகின்றது. பலமுறை நேரில் சென்று கோரிய போதிலும் ஒரு சிலருக்கு மட்டுமே நிலுவைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இருப்பினும் பலருக்கு வழங்கப்படவே இல்லை.
இவ்வாறு வழங்கப்பட்ட சிலருக்கான கொடுப்பனவு இறுதியாக 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவில் வழங்கப்பட்டது. இதற்குப் பின்னர் எவருக்கும் வழங்கப்படவில்லை.
வலய மற்றும் மாகாண திணைக்கள ங்களில் பணியாற்றும் அலுவலர்களின் அசிரத்தையே இந்தத் தாமதங்களுக்குக் காரணமாக இருப்பது கண்கூடாகத் தெரிகின்றது. எத்தனை தடவைகள் அலுவலகங்களுக்கு அலைந்தாலும் அது தொடர்பில் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவிக்கும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்ததாவது,
”வலய ரீதியில் நிலுவைகளைக் கணக்கிட்டு மாகாணத்தின் ஊடாக திறைசேரியிடம் விண்ணப்பித்தே நிலுவையைப் பெற்று விநியோகம் செய்வது வழமை. இந்த அடிப்படையில் வடக்கு மாகாண ஆசிரியர்களின் நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மட்டும் 539 மில்லியன் ரூபா வேண்டும். அதில் இந்த ஆண்டு கணக்கிட்ட 153 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்தோம். இருப்பினும் அவை கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சிகள் இடம்பெறுகின்றன” என்றார்.
Post a Comment