Ads (728x90)

உலகத்தில் பூகோள ரீதியில் ஆபத்தான இடத்தில் அமைந்திருப்பதால் பேரிடர் அடிக்கடி நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தோனேஷியா விளங்குகிறது.

இதை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கிடையே சுனாமி ஏற்பட்டது. இதில் இதுவரை 373 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

க்ரகடோவா எரிமலை வெடித்ததில் இந்த சுனாமி உண்டாகியிருக்கலாம் என பேரிடர் மேலாண்மைத்துறை கூறியுள்ளது. முதலில் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை எனக் கூறியிருந்த பேரிடர் மேலாண்மைத்துறை  பின்னர் அது தவறான தகவல் என மன்னிப்பும் கோரியது.

போதிய முன்னெச்சரிக்கை கருவிகள் இல்லாததால் சுனாமியை முன்கூட்டியே கணிக்க முடியவில்லை என்றும், இதனால் மக்களை அப்புறப்படுத்த முடியாமல் போனதாகவும் பேரிடர் மேலாண்மைத்துறை வருத்தம் தெரிவித்துள்ளது.நிதிப் பற்றாக்குறை, தொழில்நுட்பக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் சுனாமியை கணிக்கும் இயந்திரங்கள் செயலற்றுக் கிடப்பதாகவும் பேரிடர் மேலாண்மைத்துறை குறிப்பிட்டுள்ளது. எரிமலை வெடிப்புகளால் ஏற்படும் சுனாமிகளையும் கணிக்க முன்னெச்சரிக்கைக் கருவிகள் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

பாண்டென் மாகாணத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட இந்தோனேஷிய குடியரசுத் தலைவர் ஜோகோ விடோடோ பழுதடைந்த முன்னெச்சரிக்கை கருவிகளை மாற்ற உத்தரவிட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget