ஆசிய கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்குபற்றும் இக்கிரிக்கெட் தொடர் கடந்த 7 ந்திகதி ஆரம்பமானது.
2013 இல் ஆரம்பமான இத்தொடரின் முதல் சம்பியனாக இந்தியா தெரிவானது. அதனைத் தொடர்ந்து 2017 இல் இடம் பெற்ற தொடரில் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
இம்முறை வளர்ந்து வரும் ஆசிய கிண்ண போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றன. குழுநிலைப் போட்டிகளில் முதல் 4 இடங்களைப் பிடித்த இலங்கை, பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் அரையிறுதியில் பங்கு கொண்டன.
பாகிஸ்தான் அணியுடன் இடம் பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியும், பங்களாதேஷ் அணியுடன் இடம் பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியும் நேற்று இறுதிப்போட்டியில் மோதின.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமாகிய போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
தொடர் முழுவதும் சகல துறைகளிலும் பிரகாசித்த இலங்கை வளர்ந்து வரும் அணி இன்றைய இறுதிப்போட்டியில் சிறப்பான துடுப்பாட்டம் மூலம் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய வளர்ந்து வரும் அணி ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது. சீரான இடைவெளியில் இலங்கை அணி விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் தமது முயற்சியில் சற்றும் தளரவில்லை. சிறப்பாக ஆடி ஓட்டங்களை இலகுவாக குவித்த இந்திய அணித்தலைவர் ஜயந்த் யாதவ் மற்றும் நிடிஷ் ராணா ஆகியோரை அசேல குணரத்ன வீழ்த்தியதுடன் போட்டி இலங்கை அணியின் பக்கம் திரும்பியது.
எனினும் 49ஆவது ஓவர் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 251 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன்படி இறுதி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 19 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் இறுதி ஓவரை வீச கமிந்து மெண்டிஸ் அழைக்கப்பட்டார். மெண்டிஸ் வீசிய முதல் பந்தில் எவ்வித ஓட்டமும் பெறப்படாத போதிலும் 2ஆம் 4ஆம் பந்துகளில் இந்திய துடுப்பாட்ட வீரர் அன்டிட் சேத் இரு 6 ஓட்டங்களை விளாச போட்டி விறுவிறுப்பின் உச்சத்தை எட்டியது.
எனினும் சிறப்பாக செயற்பட்ட மெண்டிஸ் அடுத்த இரு பந்துகளுக்கும் 4 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுக்க இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய கமிந்து மெண்டிஸ் மொத்தமாக 310 ஓட்டங்களைக் குவித்தோடு 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடரின் சிறப்பாட்டக்காரராகவும், போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

Post a Comment