எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கொள்வதே எமது இலக்காகும். இனிவரும் பத்து மாதகாலத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து முன்செல்வோமாயின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஜாதிக ஹெலஉறுமய கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாம் மீண்டும் அரசாங்கம் அமைத்தது முதல் கடந்த அரசாங்கத்தில் ஊழலில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளைத் துரிதப்படுத்துவோம். மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஊழல்கள், கோத்தாபய ராஜபக்ஷவின் எவன்காட் மற்றும் மிக் விமானக் கொள்வனவு போன்றவற்றில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் மஹிந்த ராஜபக்ஷவால் யாரை வேண்டுமானாலும் தோற்கடிக்க முடியும், பாராளுமன்றத்தில் எதை வேண்டுமானாலும் அவரால் செய்ய முடியும் என்றார்கள். ஆனால் 50 நாட்கள் கடந்தும் அவரால் எதனையும் செய்ய முடியவில்லை. அவருடைய உண்மை நிலை என்ன என்று தற்போது மக்கள் அவருக்கு காட்டியிருக்கின்றார்கள்.
பொருளாதாரத்தை முன்னேற்றுவோம் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை. அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்த்தி விட்டோம். நாட்டின் தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டமையை போன்றே ஏகாதிபத்தியவாதத்தில் இருந்து விடுதலையடைந்து, ஜனநாயகத்தை வெற்றி கொண்ட நாள் இதுவென்றே கூற வேண்டும். ஏகாதிபத்தியவாதம் மற்றும் அநீதி என்பவற்றைத் தோற்கடித்து நீதியான செயற்படத்தக்க சமூகம் ஒன்றினை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளோம்.
சர்வதேசத்தின் தலையீடு மற்றும் சி.ஐ.ஏ போன்றவையே தம்மை தோற்கடித்ததாக மஹிந்த அணியினர் கூறுகின்றனர். காலிமுகத்திடலுக்கு திரண்டு வருகை தந்துள்ள மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்படி அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். இந்த மக்கள் அணியே ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளைத் தோற்கடித்தனர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காலிமுகத்திடலில் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஜனநாயக வெற்றியைக் கொண்டாடும் வகையிலான பாரிய மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment