அண்ணாதுரை சமாதிக்கு சென்ற, சோனியாவும், ராகுலும், காமராஜர் நினைவிடத்திற்கு வராமல் போனது, தமிழக காங்கிரஸில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, அறிவாலயத்தில், கருணாநிதி சிலை திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது.இது முடிந்ததும், மெரினாவில் உள்ள, அண்ணாதுரை, கருணாநிதி சமாதிகளுக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் சென்றனர்; அங்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.அதேபோல, கிண்டியில் உள்ள, மறைந்த தலைவர் காமராஜர் நினைவிடத்திலும், இருவரும் மரியாதை செலுத்த வேண்டும் என, காங்கிரசார் விரும்பினர்.
அந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு, தென் சென்னை மாவட்ட தலைவர், கராத்தே தியாகராஜன் கடிதம் எழுதியிருந்தார்.இந்நிகழ்ச்சிகளை முடித்து, சோனியா, ராகுலும், காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடம் வழியாகத் தான், விமான நிலையம் சென்றனர். அங்கு வருவர் என, எதிர்பார்த்து, ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் காத்திருந்தனர்.
ஆனால், வராமல் போனதால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த விவகாரம், தமிழக காங்கிரஸ் கட்சியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, காங்கிரசார் கூறியதாவது:காங்கிரசை வீழ்த்திய, அண்ணாதுரை சமாதிக்கு சென்றவர்கள், காங்கிரசை வளர்த்த, காமராஜர் நினைவிடத்திற்கு வர மறுத்தது, எங்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால், இதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர், இந்த விஷயத்தை, சோனியா, ராகுலிடம் கொண்டு சென்றாரா என்பதே தெரியவில்லை.
இது குறித்து, மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத்திடம், நேற்று காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில், சோனியா, ராகுலை வரவேற்கவும், வழியனுப்பவும், காங்கிரசில், 40 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதை, சோனியாவிடம் கூறி விடுவார் என்பதால், காரத்தே தியாகராஜனுக்கு, அனுமதி தரப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Post a Comment