Ads (728x90)

ஜனவரி 27 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கான அவசியமில்லை. இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை மீண்டும் ஜனவரி 27 ஆம் திகதி பரிசீலிக்கப்போவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தற்போதுள்ள எரிபொருட்களின் இருப்புக்கள் தொடர்பாகவும், அவற்றை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கக்கூடிய திகதிகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு கச்சா எண்ணெய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு எரிபொருள் மற்றும் நாப்தா மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும். 

இதேவேளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார நெருக்கடிக்கு குறுகிய மற்றும் நடுத்தர கால தீர்வுகள் பலவற்றை பரிந்துரைத்துள்ளது. மின்சார நுகர்வோரின் ஆதரவுடன் துரிதப்படுத்தப்பட்ட மின் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மின்சாரத்திற்கான தேவையை குறைப்பது குறுகிய கால திட்டங்களில் ஒன்றாகும். 

மேலும் மத்திய கால தீர்வாக அரசு மற்றும் தனியார் துறை மின் உற்பத்தியாளர்களை திறம்பட பயன்படுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் 3,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின் உற்பத்தித்திறன் கொண்ட ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துகின்றன. மின் பற்றாக்குறை ஏற்பட்டால் அந்த ஜெனரேட்டர்களில் இருந்து திறன்வாய்ந்த மின் உற்பத்தியை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற ஜெனரேட்டர்களை தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி அமைப்புகளை விரைவில் நிறுவுமாறு பரிந்துரைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget