Ads (728x90)

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த முக்கிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் தமிழர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்குச் சென்று இந்தியத்தூதர் கோபால் போக்லேயிடம் மோடிக்கு எழுதிய கடிதத்தை நேரில் வழங்கியுள்ளனர்.

ஏழு பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதத்தில் இலங்கையில் ஆட்சியில் இருந்த பல்வேறு அரசாங்கங்களின் தமிழர் உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த உதவுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய தகவலை அறிந்ததும் அதற்கு அமைச்சர் உதய கம்மன்பில கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுப்ப வேண்டிய இடம் இந்திய பிரதமரிடம் அல்ல, இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திடம் எழுப்ப வேண்டும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட உதய கம்மன்பில, இலங்கை இறையாண்மையுள்ள நாடு. அது இந்தியாவின் பகுதி அல்ல. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாதது பற்றி தமிழ்க் கட்சிகள் கவலை கொள்கிறார்கள் என்றால் அதை வெளிப்படுத்த மற்றும் செல்ல வேண்டிய இடம் இலங்கை அதிபரிடம்தான். இந்தியப் பிரதமரிடம் அல்ல என கூறியுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget