Ads (728x90)

கொழும்பு - காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் இணைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரு தினங்களாகப் பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர், யுவதிகள் தாம் தமிழ் - சிங்கள புத்தாண்டையும் இந்த இடத்திலேயே கொண்டாடுவோம் என்று அறிவித்துள்ளனர். அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் , சகோதரத்துவத்துடனும் போராட்டத்தையும் கைவிடாது, அதே வேளை புத்தாண்டையும் கொண்டாட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருக்கும் வரை எமது போராட்டம் ஓயப் போவதில்லை. அவர் பதவிலியிருந்து விலகி பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை கையளிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவு செய்யப்படும் தலைவரால் நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞர், யுவதிகள் தெரிவித்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget