Ads (728x90)

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை உறுதிப்படுத்துவதன் மூலம், தற்போதைய நாட்டை விட சிறந்த ஒரு தேசத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மற்றும் நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீரற்ற வானிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தார்.

சொத்து வரி 2026 ஆம் ஆண்டில் விதிக்கப்படமாட்டாது என்றும், அது 2027 ஆம் ஆண்டிலேயே பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்தத் தீர்மானம் குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இயற்கை அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பின்வரும் அறிவிப்புகளை ஜனாதிபதி வெளியிட்டார்.

அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஏற்கனவே 10,500 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நிவாரணப் பணிகளுக்காக 50 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்புப் பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சீரற்ற வானிலையினால் மொத்தமாக 1.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,165 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் மற்றும் 55,747 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

அதன்படி இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அதேபோல் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு அத்தியாவசிய உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

தற்போது முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும். மாறாக முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு 3 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபா வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். தேவைப்பட்டால் இது 6 மாதம் வரை நீடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நெல், சோளம் மற்றும் தானிய பயிர்செய்கைக்கு ஹெக்டேருக்கு 150,000 ரூபா வழங்கப்படும் என்றும், வௌ்ளம் மற்றும் மண்சரிவுகளால் சேதமடைந்த காய்கறி செய்கையாளர்களுக்கு ஹெக்டேருக்கு 200,000 ரூபா வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோல் சீரற்ற வானிலையால் முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள 50 இலட்சம் ரூபாயும், காணிகள் அற்றவர்களுக்கு அரசாங்கத்தினால் காணி வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அவ்வாறு அரச காணிகள் இல்லாவிட்டால் காணி ஒன்றை கொள்வனவு செய்ய 50 இலட்சம் ரூபா வரை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனர்நிர்மாணம் செய்ய ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 இலட்சம் ரூபா வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, அனர்த்தத்தினால் இழந்த உயிர்களை மீண்டும் கொடுக்க முடியாது என்றாலும், ஒரு அரசாங்கமாக உயிருடன் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான பண்புகளைக் கொண்ட ஒரு நாட்டை உரிமையாக்கிக் கொடுப்பதே தனது எதிர்பார்ப்பு என்று  தெரிவித்தார். 

அரசாங்கம் அதற்காக அதிகபட்சம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், இவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாதிருப்பதை உறுதி செய்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

அனர்த்தம் காரணமாக இதுவரையில் தமது உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களை இழந்து வேதனையில் இருப்பவர்களுக்கு ஒரு நாடாக தமது அனுதாபத்தை தெரிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

எந்தவொரு அனர்த்தத்திலும் மனித உயிர்களை பறிக்க முடியும். ஆனால் எமக்கு ஒன்று தெளிவாகப் புலப்பட்டுள்ளது. இலங்கையர்களிடம் உள்ள மனிதநேயத்தை எந்தவொரு அனர்த்தத்திலும் பறிக்க முடியாது என்ற பலமான பண்பு இந்த அனர்த்தத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தருணத்திலும் மாத்தறை மக்கள் பதுளைக்குச் சென்றுள்ளனர். காலியில் உள்ளவர்கள் கண்டிக்குச் சென்றுள்ளனர். களுத்துறையில் உள்ளவர்கள் நுவரெலியாவுக்குச் சென்றுள்ளனர். அம்பாந்தோட்டையில் உள்ளவர்கள் புத்தளத்திற்குச் சென்றுள்ளனர். 

தாம் ஒருபோதும் நடந்திராத வீதிகளை அவர்கள் துப்புரவு செய்து கொண்டிருக்கிறார்கள். தமது உறவினரோ, நண்பரோ அல்லாத பிரஜை ஒருவரின் வீட்டை சுத்தம் செய்கிறார்கள். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள மக்களுடன் தோளோடு தோள் நின்று துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இதுதான் நம் நாட்டில் எந்த அனர்த்தத்தின் போதும் பறிக்க முடியாத மனிதநேயம் என்பதை இந்த அனர்த்தத்தில் எமக்கு நிரூபித்து வருகின்றனர். 

அத்துடன் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்தத் தருணத்திலும் தாய்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் இரவு பகல் பாராது உழைத்து வருவதாக வலியுறுத்திய ஜனாதிபதி, அவர்கள் பெரும் அதிர்ச்சியுடன் இதற்காகத் தலையிடுவது குறித்து நன்றி தெரிவித்தார். 

இரத்த வங்கிக்கு 20,000 அலகுகள் நன்கொடையையும் எமது நாட்டு மக்கள் வழங்கியுள்ளதாகவும், அது எந்தவொரு அனர்த்தத்திலும் அழிக்க முடியாத மனிதநேயம் என்றும் அவர் வலியுறுத்தினார். 

வளர்ச்சியடைந்த பல நாடுகளின் பிரதான காரணி மக்களின் தைரியமான தலையீடே என்று கூறிய ஜனாதிபதி, சில அரசியல்வாதிகள் அதையும் கேலிக்குரிய நிலைக்கு உள்ளாக்கியதாகத் தெரிவித்தார். 

இந்த அனர்த்தம் ஏற்பட்ட போது எமது மக்களை மீட்பதற்கு முப்படைகளும், பொலிஸாரும் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். கலா ஓயாவில் பஸ் வண்டியில் இருந்த 70 இற்கும் அதிகமானோர் எந்த நேரத்தில் தமது உயிர் போகுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மணித்தியாலத்திற்கு ஒரு முறை பேஸ்புக் பதிவுகளை இட்டனர். அந்த நேரத்திலும் எமது கடற்படையினர் அவர்களை மீட்பதற்கான வீரமிக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அந்த மக்களை கூரை ஒன்றின் மேல் ஏற்றினர். சிறிது நேரத்தில் பஸ் அடித்துச் செல்லப்பட்டது. படகு பழுதடைந்தது. அந்த அதிகாரிகளுக்கும் தமது உயிரைப் பாதுகாக்க கூரையின் மீது இருக்க நேரிட்டது. 18 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் 70 இற்கும் அதிகமானோர் கடும் வெள்ளப்பெருக்கிற்கு மத்தியில் அந்த கூரையின் மீது உயிர்வாழ தைரியம் கொடுத்தது அந்த மூன்று கடற்படை அதிகாரிகளே. 

அதிகாலை 3.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து நொச்சியாகமவிற்கு வரும்போது அந்த கிராமத்து இளைஞர்கள் இருவர் வேறு பாதையொன்றைக் காட்டியதால் 70 பேரையும் பாதுகாப்பாக மீட்க கிடைத்தது. அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். 

மாவிலாறு அணை உடையும் சந்தர்ப்பத்தில் கூட இராணுவம், பொலிஸ் மற்றும் மக்கள் முன்னின்று ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடிந்ததாக ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார். 

இந்த அனர்த்த நிலைமைக்குள் உயிரைத் தியாகம் செய்து முப்படையினர் உள்ளிட்ட அரச சேவையினர் பாரிய அர்ப்பணிப்பை மேற்கொண்டதாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். 

கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அந்த அனர்த்தம் இடம்பெற்ற நேரத்திலும் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்த கனவான்கள் அழகாக ஆடை அணிந்து, வாசனை திரவியம் பூசிக் கொண்டு சென்று அரசாங்க அதிபரிடம் கேள்வி கேட்கிறார்கள், இது எங்கே இருக்கிறது என்று. அதனால் அரச ஊழியர்கள் இந்த அனர்த்தத்தின் போது ஆற்றிய பணி குறித்து நாம் மிகவும் நன்றி கூற வேண்டும். 

சுகாதாரத் துறையினர் மக்களின் உயிரைக் காக்க பாரிய பணியொன்றை முன்னெடுத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

எமது நாட்டின் பொருளாதாரம் சிறந்த இடத்தில் இல்லை. எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு வெளியிலிருந்து வரும் சிறிய அதிர்ச்சியைக்கூட தாங்கிக் கொள்ள முடியாது. நாம் இந்தப் பொருளாதாரத்தை மிகவும் அவதானமாக முகாமைத்துவம் செய்து கொண்டு முன்னெடுத்துச் செல்லும் பயணம் இது. ஆனால் சிலர் வெறி பிடித்த மனதுடன், எமது பொருளாதாரம் குறித்து கொடூரமான மனநிலையுடன் வாழ்கின்றனர் எனவும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget