Ads (728x90)

வரவு - செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டுக்கமைய ”தேசிய வீடமைப்பு திட்டம்-2026” இன் கீழ் இவ்வாண்டுக்குள் 16,025 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு, தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மேலும் 20,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. 

பெருந்தோட்டப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ளக இடம்பெயர்ந்தோருக்கான 2,500 வீடமைப்பு திட்டம் என்பனவும் இதில் உள்ளடங்குவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

”2026 - தேசிய வீடமைப்பு திட்டம்” தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

2026 ஆம் ஆண்டுக்கான வரவ - செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய 5 அமைச்சுக்கள் இணைந்து 9 மாகாண சபைகள் ஊடாக இந்த தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு இந்த திட்டத்தில் பிரதான பங்கினை வகிக்கிறது. 

அதற்கமைய எமது அமைச்சின் கீழ் வடக்கு, கிழக்கில் உள்ளக இடம்பெயர்ந்தோருக்கான வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 2,500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அதற்காக 500 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 8 மாவட்டங்களில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமையவே கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இந்த வீட்டுத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 28 ஆம் திகதி புதன்கிழமை காலியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget