Ads (728x90)

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் நிட்டம்புவ நகரில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 4 பேருக்கு 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 23 பேர் இந்த வழக்கிலிருந்து நிரபராதிகளாக கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் 41 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சஹான் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ருவந்த கொடவெல ஆகிய மூவரடங்கிய கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. 

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது, அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பொலன்னறுவை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது நிட்டம்புவ நகரில் வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது முன்னாள் எம்.பி அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஜயந்த குணவர்தன ஆகியோர் ஈவிரக்கமின்றித் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget