பாடசாலை மாணவர் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கான அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்குரிய ஒழுங்குவிதிகளின் வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் உள்வாங்கப்பட வேண்டிய புதிய முன்மொழிவுகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
பாடசாலை மாணவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டவிதிமுறைகளை அறிமுகப்படுத்துதல், சிறுவர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து மாணவர் போக்குவரத்தின் போது பதிவாகும் துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுத்தல், பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுபவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்தி அதனை ஒரு பொறுப்புவாய்ந்த சேவையாக மாற்றுவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியன ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
"சிசு செரிய" என்பது இலங்கை போக்குவரத்து சபையின் நிலையங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் பஸ்களை இணைத்து, 2005 முதல் இயங்கும் மானியத்துடன் கூடிய, நம்பகமான மற்றும் பாதுகாப்பான பாடசாலை பஸ் சேவை ஆகும்.
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸின் கூட்டு முயற்சியால் இயங்கும் இச்சேவை, 1,500 இற்கும் மேற்பட்ட பஸ்களுடன் மாணவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வழங்குகின்றது.

Post a Comment