Ads (728x90)

”அருணு தொர”தேசிய வாசிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நடமாடும் நூலக வாகனங்கள் விநியோகிக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் அரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் கெஸ்பேவ மற்றும் சீதாவக்கபுர நகர சபைகள் மற்றும் ஹோமாகம, தொம்பே, அத்தனகல்லை, மினுவங்கொடை, வத்தளை, புலத்சிங்ஹல, வலல்லாவிட்ட மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச சபைகளுக்கும் நவீன வசதிகளுடன் கூடிய 10 நடமாடும் நூலக வாகனங்கள் மற்றும் 9,300 புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.

Clean Sri Lanka செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேல் மாகாண சபையின் உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஊடாக இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

கிராமிய மட்டத்தில் வாசிப்பு ஆர்வத்தை வளர்ப்பதன் மூலம் அறிவார்ந்த இலங்கையர்களை உருவாக்கும் நோக்கத்துடன் ”அருணு தொர”தேசிய வாசிப்பு ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

புதிய சமூகத்தை கட்டியெழுப்புவதில் சரியான சமூக வாசிப்பு அவசியம் என்றும், மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த புத்தகங்களுடன் கிராமம் கிராமமாகச் செல்வது ஒரு அழகான அனுபவம் என்று இங்கு சிறப்புரை ஆற்றிய சிரேஷ்ட எழுத்தாளர் மஹிந்த பிரசாத் மஸ்இம்புல குறிப்பிட்டார்.

இலக்கிய வளங்களிலும், இலக்கிய வெளியீடுகளிலும் பற்றாக்குறை இல்லாத நமது நாட்டில் சரியான மற்றும் முறையான வழிமுறையின் கீழ் அவற்றை வாசிப்பு சமூகத்திற்கு எடுத்துச் செல்வதற்காக Clean Sri Lanka ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டம், எளிய செயல்முறை அல்ல என்றும் மாறாக மிகவும் பெறுமதிமிக்க கலாசார செயல்முறை என்று சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் புத்தகங்களை வாசிக்கும் கலாசாரம் மீண்டும் இந்நாட்டில் உருவாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

83 கறுப்பு ஜூலையில் அண்டை வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தான் வெளியேறும்போது இரண்டு புத்தகங்கள் மற்றும் மூன்று சட்டைகளை மாத்திரமே எடுத்துச் சென்றதாகவும், புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தான் பெற்ற அனுபவம், வாழ்க்கையில் வெற்றிபெற உதவியது என்று இக்கூட்டத்தில் உரையாற்றிய மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப் தெரிவித்தார்.

Clean Sri Lanka வேலைத்திட்டம் சுற்றாடலை மாத்திரமன்றி மனதையும் தூய்மைப்படுத்தும் ஒரு திட்டம் என்று சுட்டிக்காட்டிய ஆளுநர் ஹனிப் யூசுப், எதிர்கால சந்ததியினருக்காக தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்றைய போராட்டம் மிக்க சமூகத்தில் நல்லொழுக்கமுள்ள எதிர்கால சந்ததியினரைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் இத்தகைய திட்டங்கள் மிகவும் முக்கியமானவை என்று குறிப்பிட்டார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget