நேற்று பிற்பகல் நியங்கொட பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
தித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்த தும்பனே, ஹாரிஸ்பத்துவ, ஹதரலியத்த, பூஜபிட்டிய, யட்டிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 146 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.வரவுசெலவுத்திட்ட சுற்றறிக்கை 08/2025 இன் தொடர் இலக்கம் 12 இன் படி வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா முதல் தவணையாக தலா ரூபா 20 இலட்சத்திற்கான காசோலைகள் இங்கு வழங்கப்பட்டன.
எமது நாட்டின் பிரதான பலம் நாம் ஒன்றிணைவதிலேயே உள்ளது என்பதையும், அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் நாட்டை வலுவாகக் கட்டியெழுப்ப முடியும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பௌத்த தர்மம் மற்றும் எமது வரலாறு என்பது எமக்கு அரசியல் மேடைகளில் பயன்படுத்தப்படும் வெறும் கோஷங்கள் அல்ல என்றும், எமது கடந்தகால உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன உலகிற்கு ஏற்ற பொருளாதார மாற்றத்திற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.அதேபோல் இன்று தெளிவான அரசியல், தொலைநோக்கு மற்றும் கொள்கை என்பது அரசாங்கத்திடம் மாத்திரமே இருப்பதாகவும், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு கௌரவமிக்க மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியதோடு, பௌத்த மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களினதும் வழிகாட்டல்களுக்கு அமைய, ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து செயற்படுவோம் என இதன்போது அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.



Post a Comment