Ads (728x90)

அபிவிருத்தி ஆண்டில் அபிவிருத்தி நிர்வாகத்தை முன்னெடுப்பதற்குத் துரித முடிவெடுக்கும் ஆற்றலும், வேலையின் மீதான அர்ப்பணிப்பும் மிக அவசியம். இந்தக் கொள்கையுடன் அனைவரும் எம்மோடு இணைந்து  பயணிக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோது அவர் இதனை தெரிவித்தார். 

கடந்த 2025ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் பின்னூட்டங்கள் பெறப்பட்டு, அவை நிதி ஆணைக்குழு மற்றும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, இந்த ஆண்டுக்கான திட்டங்களைக் கையாள வேண்டும்.

2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் மதிப்பீட்டுப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் கீழான திணைக்களங்கள் ஏற்கனவே கேள்வி கோரல்களைப் பிரசுரித்துள்ளமை பாராட்டத்தக்கது. ஏனைய அமைச்சுக்களும் இச்செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

அலுவலகங்களுக்குள் மட்டும் முடங்கி இருக்காது, ஒவ்வொரு அமைச்சும் ஒவ்வொரு மாதமும் மாகாணத்தின் ஏதாவது ஒரு கிராமத்தைத் தெரிவு செய்து, அங்கு நேரடியாகச் சென்று மக்களின் தேவைகளை அடையாளப்படுத்தி, அவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கெனத் தனியானதொரு பொறிமுறையை அமைச்சுக்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

திணைக்களங்களைக் கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு அமைச்சின் செயலாளர்கள் ஊடாகவும் அமைக்கப்பட்ட 'பறக்கும் படை' மேலும் வினைத்திறனாகச் செயற்பட வேண்டும். அரச அலுவலர்களின் நேர முகாமைத்துவம் மற்றும் சேவை வழங்கல் குறித்துப் பொதுமக்களிடமிருந்து எனக்குப் பல நேரடி முறைப்பாடுகள் வருகின்றன. பறக்கும் படை துடிப்பாகச் செயற்பட்டால் இத்தகைய குறைபாடுகளைத் தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget