Ads (728x90)

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று காலை பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான மீள் விசாரணைகளின் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகக் கிடைத்துள்ள வலுவான சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இது குறித்து நீண்டகால விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால் மேலதிக தகவல்களை இப்போதைக்கு வெளியிட முடியாது எனவும் தெரிவித்தார்.

கைதுக்கான காரணத்தை உடனடியாக அறிவிக்காமல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த சஜீவ மெதவத்த, "அவரைக் கைது செய்யாமல் இருந்திருந்தால் தான் பொலிஸாருக்கு எதிராக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொலிஸார் தமது கடமையைச் சரியாகச் செய்துள்ளனர்" எனக் குறிப்பிட்டார்.

சுரேஷ் சலேவிடம் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளின் ஊடாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள 'மகா சூத்திரதாரி'  தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget