Ads (728x90)

ருமேனியாவிற்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார். 

இந்த விஜயத்தின் போது இலங்கை மற்றும் ருமேனியா இடையே தொழிலாளர் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கட்டுமானம் மற்றும் சுற்றுலாத்துறைகளில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ருமேனியாவில் அதிக வாய்ப்புகளை உருவாக்குவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்சார் உறவுகளை வலுப்படுத்துவதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமைச்சர் விஜித ஹேரத் அந்தநாட்டு தொழிலாளர் துறை, வெளியுறவுத்துறை மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

ருமேனியாவில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அந்தநாட்டு ஊழியர்களுக்கு இணையான உரிமைகள் வழங்கப்படும் என ருமேனிய தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இலங்கையர்களுக்கான வேலை விசா வழங்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தியமைக்காக அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அதேநேரம் போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ருமேனியாவில் முறையான ஆவணங்களின்றி தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வருடம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பெறுமதி 42 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மாத்திரமே காணப்பட்டது. இதனை அதிகரிப்பது குறித்தும், சுற்றுலாத்துறையில் ருமேனிய முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget