Ads (728x90)

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடுகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் சாட்சியம் வழங்கும் முக்கிய நபர்களுக்குக் கொலை மிரட்டல்களும், போதைப்பொருள் வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டல்களும் விடுக்கப்படுவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு சிறையில் இருந்தபோது, பேராசிரியர் ரொஹான் குணரத்ன அவரை மூன்று முறை சந்தித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் ஐ.எஸ் அமைப்பினால் மட்டுமே நடத்தப்பட்டது என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக இவர்கள் இருவரும் இணைந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், வவுணதீவில் இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சஹ்ரான் குழுவினர் செய்த போதிலும், அதனை விடுதலைப் புலிகள் மீது திசைதிருப்பத் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சதித்திட்டங்கள் குறித்துத் தகவல் வழங்கும் சாட்சிகளை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றனர்.

சாட்சிகளுக்குப் பணம் கொடுத்தல், வெளிநாட்டுப் பயண ஆசை காட்டுதல், அதற்கு இணங்காதவர்களை உந்துருளிகளில் பின்தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டுதல் போன்ற செயற்பாடுகள் குறித்து நீதிமன்றில் விவரிக்கப்பட்டது.

குறிப்பாக, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஆயுதங்களை வழங்கியதாகத் தகவல் வெளியிட்ட சாட்சிக்கு, மட்டக்களப்பு சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலக உத்தியோகத்தர்கள் நேரடியாகக் கொலை மிரட்டல் விடுத்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது.

தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த இராணுவ அதிகாரி ஒருவரைப் பற்றித் தகவல் வழங்கிய சாட்சி, போலி பேஸ்புக் கணக்கு மூலம் வரவழைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சூழலை மிகவும் பாரதூரமானது என வர்ணித்த கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நீதிமன்ற உத்தரவுகளுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்றும், சட்டமா அதிபர் திணைக்களம் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் கொண்டுள்ளது என்றும் உத்தரவிட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget